என்ன தான் நடக்குது தாராபுரத்தில்.. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதம் | Permission denied for Journalists to enter in Dharapuram counting center

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரத்தில் தொடங்கி வாக்கு எண்ணும் மையம் வரை பரபரப்பு ஓயவில்லை. தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு தவெகவில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 13 பேர் சுயேச்சைகள். தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்கள். தவெக, அதிமுக, திமுக இடையே தான் போட்டியே.

Dharapuram Journalists

தாராபுரம் வாக்கு எண்ணும் மையம்

தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்கு பதிவானது. தாராபுரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். இந்த பணியில் 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காலை 6.30 மணியில் இருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பிரதான கட்சி முகவர்கள் வருகை புரிந்தனர். முகவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கியூ.ஆர். கோட் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். தாராபுரம் தொகுதிக்கான திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் மையத்தில் ஏற்பாடுகளில் மெகா சொதப்பல் ஆகியுள்ளது. முகவர்களுக்கு, எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இதனால் முகவர்கள் கோபமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டு மந்தைகளை போல உள்ளது. ஆடுகளை அடைத்து வைப்பது போல முகவர்களை அடைத்து வைப்பது போல அடைக்கிறார்கள் என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள், போலீசாருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“முகவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. வாக்கு எண்ணும் பணி நியாயமாக நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. செய்தியாளர்களுக்கே உண்மையை அறிய தடுப்பது சரியா” என்று கேள்வி எழுப்பினர். தேர்தல் பிரச்சார களத்தில் இருந்தே அதிகாரிகள், தவெகவுக்கு சாதகமாக இருப்பதாக புகார் எழுந்தது. தற்போது வாக்கு எண்ணும் மையத்திலும் அதே புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *