மேலும் ஆறு வருடங்கள் கழித்து என் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்ட பிரசவ சிக்கலையும் தீர்த்து வைத்து, மீண்டும் அனைவருக்கும், எனக்கும் நம்பிக்கையும் தைரியமும் கொடுத்து, என் இரண்டாவது குழந்தைக்கும் சுகப்பிரசவம் ஏற்படுத்தி பூமிக்கு வரவழைத்து விட்டார்கள்.
இன்றும் அந்த இரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கும்போது, இறைவனின் அருளாலும், டாக்டர் சுப்புலட்சுமி மேடம் கொடுத்த சரியான வழிகாட்டுதலாலும், அவர் சொன்னது போலவே நான் இன்று வரை எனக்கு எந்தவொரு நீண்டகால முதுகுவலி பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். அந்த உண்மையை நினைக்கும் ஒவ்வொரு முறையும்,அவர் மீது என் நன்றி இன்னும் அதிகமாகிறது.
இன்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால் அவர் இன்னும் அதே கிளினிக்கில், அதே புன்னகையுடன், அதே அன்போடும், அதே நம்பிக்கை தரும் வார்த்தைகளோடும் நோயாளிகளை வரவேற்கிறார்.
அவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும், “நன்றி மேடம்” என்று சொல்லாமல் என்னால் வர முடியாது. ஒரு மருத்துவரின் உண்மையான வெற்றி அவர் எழுதும் மருந்துச் சீட்டில் இல்லை; நோயாளியின் மனதில் விதைக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
இன்று இந்தக் கட்டுரை மூலமாக டாக்டர் சுப்புலட்சுமி மேடத்திற்கு என் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நாள் பிரசவ அறையில் அவர் எனக்குக் கொடுத்த தைரியத்தை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
என் இரண்டு குழந்தைகளின் பிறப்பிலும், என் தாய்மையின் பயணத்திலும், என் வாழ்க்கையின் அழகான நினைவுகளிலும் டாக்டர் சுப்புலட்சுமி மேடம் என்றென்றும் இடம் பெற்றிருப்பார்.
ஒரு சுவாரஸ்யமான உண்மை — நானும் என் அம்மாவின் கருவிலிருந்து வெளிவந்த நான் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து என்னையும் பார்த்தவர் இதே டாக்டர் சுப்புலட்சுமி மேடம்தான். இன்று என் குழந்தைகளுக்கும் அவரே மருத்துவர். ஒரே மருத்துவர், எங்கள் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகளுக்கும் அன்போடு உடன் இருக்கிறார் என்பது, என்னைப் பொறுத்தவரை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.நான் இன்றும் எனக்கு உடம்பில் ஏதாவது பிரச்சினை என்றாலும், இவர்களிடம் காண்பித்து விட்டு சென்றால், எனக்கு உடனே உடல் சரியாகி விடும் என்பது திண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல… ஒரு தாயின் அன்புடன் மற்றொரு தாய்க்கு தைரியம் கொடுத்த தெய்வம்.
என்றென்றும் அன்புடன்,
இந்திரா ப்ரியதர்ஷினி…