திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திடீரென தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், “தர்ஷினியின் தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி, அவரின் மகன் நித்தின்குமார், மகள் இலக்கியா, கணவன் செங்குட்டுவன் ஆகியோர் தான் காரணம்’’ என தர்ஷினியின் தந்தை ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரில், “ரேவதியும் அவரின் மகள், மகனும் என்னுடைய வீடு புகுந்து என் மகள் தர்ஷினியை அடித்து உதைத்ததோடு, ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், மனமுடைந்து என் மகள் தர்ஷினி தற்கொலை செய்துகொண்டார்’’ எனக் கூறியிருந்தார்.

போலீஸாரும் விசாரணை நடத்தி, செங்குட்டுவனை தவிர்த்து ரேவதி, நித்தின்குமார், இலக்கியா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில், வெளியே சுற்றித்திரிந்த செங்குட்டுவன் அவ்வப்போது ரஜினி குடும்பத்தினரிடம் `உங்களையும் கொல்வோம்’ என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கிறார், ஆட்டோ ஓட்டுநர் ரஜினி. இந்த புகாரின்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.