இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய “ஆவ்ரோ-748′ (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக 2021-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து நேரடியாக வாங்கப்படும், மீதமுள்ள 40 விமானங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
அந்த 40 விமானங்களில் முதல் விமானம் தற்போது முழுமையாகத் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பறந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை போர் விமானங்கள், ராணுவ விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற அரசு நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.
முதல்முறையாக ஒரு இந்திய தனியார் நிறுவனம் (டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் – TASL) ராணுவ விமானத்தை இந்தியாவிலேயே தயாரிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை.
இந்த C-295 ஒரு நடுத்தர ரகப் போக்குவரத்து விமானம். இதில் ஒரே நேரத்தில் 70 ராணுவ வீரர்கள் அல்லது 48 பாராசூட் வீரர்கள் முழு ஆயுதங்களுடன் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 9,000 கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.