“எப்படி இருந்த கம்பெனி சார்..” ரத்தன் டாடா மறைவுக்கு பின் டாடாவில் வரிசையாக வெளியே வரும் பூதங்கள்! | Tata Sons Power Struggle What is happening: Tata Trusts and Board Clash Over Chandrasekaran, Listing

Spread the love

Business

oi-Vigneshkumar

டெல்லி: இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் அதிகார மோதல் வெடித்துள்ளது. டாடா குழுமத்தின் முதன்மை ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் இயக்குநர் குழுவுக்கும், அதில் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

டாடா சன்ஸ் சேர்மேனாக இப்போது என். சந்திரசேகரன் இருக்கிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், அவருக்கு பதவி நீடிப்பு தரப்பட்டது. இருப்பினும், என். சந்திரசேகரன் பதவியில் தொடர்வதில் நோயல் டாடாவுக்கு விருப்பமில்லை. சமீபத்தில் வாக்கெடுப்பில் கூட சந்திரசேகரன் நியமனத்திற்கு எதிராகவே நோயல் டாடா வாக்களித்திருந்தார்.

ratan tata

இது தவிர டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மற்றும் முக்கிய பங்குதாரரான ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது என வரிசையாக பல மோதல்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

டாடா குழுமம்

டாடா குழுமத்தின் கீழ் ஐடி வாகனங்கள், ஸ்டீல், மின்சாரம், விமான போக்குவரத்து, ரசாயனம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா சன்ஸ் தான் இந்த நிறுவனங்களின் முதன்மை பங்குதாரராகவும் முதலீட்டு நிறுவனமாகவும் உள்ளது. டாடா குழுமத்தின் 26 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 277 பில்லியன் டாலராக உள்ளது.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில், என். சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. 4-1 என்ற வாக்கெடுப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா மட்டும் எதிராக வாக்களித்தார். மற்றொரு டிரஸ்ட்ஸ் பிரதிநிதியான வேணு ஸ்ரீநிவாசன் கூட சந்திரசேகரனுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

சந்திரசேகரன்

68 வயதான சந்திரசேகரன், 2027 பிப்ரவரிக்கு பிறகு சேர்மேன் பதவியில் தொடர போவதில்லை என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால், டாடா குழுமத்தின் நீண்டகால நலனை கருத்தில் கொண்டு அவர் தொடர வேண்டும் என இயக்குநர் குழு கேட்டுக்கொண்டதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் டாடா சன்ஸ் தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நோயல் டாடா, சந்திரசேகரனை மீண்டும் நியமித்தது டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிரானது என கூறியுள்ளார். டிரஸ்ட்ஸால் நியமிக்கப்பட்ட இரு இயக்குநர்களும் ஒருங்கிணைந்து வாக்களிக்க வேண்டிய நிலையில், ஒருவர் ஆதரித்ததும் மற்றொருவர் எதிர்த்ததும் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.

பட்டியலிடப்படும் டாடா சன்ஸ்?

இந்த மோதலின் மற்றொரு முக்கிய அம்சம் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பானது. இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, குறிப்பிட்ட அளவை தாண்டிய சொத்துகளை கொண்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும். இந்த விதிகளில் இருந்து விலக டாடா சன்ஸ் மேற்கொண்ட முயற்சியை ரிசர்வ் வங்கி நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் டாடா சன்ஸ் பட்டியலிடப்பட வேண்டி சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் டாடா டிரஸ்ட்ஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வந்தால், நிறுவனத்தின் தற்போதைய தன்மை மாறிவிடும் என்றும், பல தலைமுறைகளாக டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் சமூக சேவை நடவடிக்கைகளும் கூட பாதிக்கப்படலாம் என்றும் நோயல் டாடா தரப்பு வாதிடுகிறது.

உடன்பாடு இல்லை

அதேநேரம் அனைத்து பங்குதாரர்களும் இதில் உடன்படவில்லை. டாடா சன்ஸில் 18.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், டாடா டிரஸ்ட்ஸுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்குதாரராக உள்ளது. அந்தக் குழுமம் தனது பங்குகளை பணமாக்க விரும்புகிறது. இதன் காரணமாகவே டாடா சன்ஸை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நடவடிக்கைக்கு ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் ஆதரவாக அளித்துள்ளார்.

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் இடையே ரத்தன் டாடா ஒரு முக்கிய பாலமாக இருந்தார். அவர் 2024ல் மறைந்த பிறகு, இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் படிப்படியாக ஏற்பட்டது. அதுவே இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது.

முதல்முறை இல்லை

அதேநேரம் டாடா குழுமத்தில் இதுபோல பிரச்சினை வெடிப்பது இதுதான் முதல்முறை என சொல்லிவிட முடியாது. இதற்கு முன்பும் டாடா குழுமத்தில் இதுபோன்ற நிர்வாக மோதல் ஏற்பட்டுள்ளது. ரத்தன் டாடாவுக்கு பிறகு டாடா சன்ஸ் தலைவரான சைரஸ் மிஸ்திரியுடனான கருத்து வேறுபாடு தீவிரமடைந்து, 2016ல் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான சட்ட போராட்டம் 2021ல் உச்சநீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நாட்டின் மிக பெரிய குழுமத்தில் இதுபோல பிரச்சினை வெடித்துள்ளது கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *