
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி, கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும்போது, பொருளாதார வசதி இல்லாததால் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும், தொகுதிக்குச் செல்வதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னைப் போல பல எம்எல்ஏக்களும் சிரமப்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 19) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்காக உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பு வெளியான மறுநாளே, கார் மாடல்களை ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, மகிந்திரா நிறுவனத்தின் Bolero, Bolero Neo, XUV 3XO, XUV 7XO AX7L, Scorpio மற்றும் Scorpio Classic S11 ஆகிய மாடல்கள் டெஸ்ட் டிரைவிற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுதவிர, டொயோட்டா, டாடா உள்ளிட்ட பிற நிறுவனங்களின் கார் மாடல்களின் புகைப்படங்களும் பரிசீலனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாடல்கள் குறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் பார்வையிட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வாகனங்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்திருப்பது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.