Tamilnadu
oi-Vigneshkumar
கள்ளக்குறிச்சி: ஏற்கனவே ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள அருள் விக்னேஷ் மீது இப்போது மற்றொரு நபரும் குற்றஞ்சாட்டியுள்ளார். மது போதையில் தனது வாகனத்தின் மீது மோதியதாகவும் மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவான அருள் விக்னேஷை சுற்றி இப்போது தொடர்ந்து சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே அவர் பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றமே இதில் நேரடியாக தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

அருள் விக்னேஷ்
திருப்பூர் எஸ்பி இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐஜி இதை கண்காணித்து வருகிறார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகாரமாக வெடித்து வருகிறது. இதற்கிடையே இதே அருள் விக்னேஷ் மதுபோதையில் வந்து தனது பைக்கை இடித்து பிரச்சினை செய்ததாகவும் தகாத வார்த்தையில் தன்னை திட்டியதாகவும் பரோட்டா மாஸ்டர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் இருக்கும் அதே தெருவில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பரோட்டா மாஸ்டராக வேலை செய்பவர் சுரேஷ். இவரது வாகனத்தை தான் எம்எல்ஏ அருள் விக்னேஷ் இடித்து சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தகாத வார்த்தையால் திட்டினார்
இது தொடர்பாக அவர், “அன்று ஒரு நாள் அவர் (அருள் விக்னேஷ்) வண்டியை கொண்டு வந்து இடித்துவிட்டார். அது குறித்துக் கேட்க சென்றபோது தகாத வார்த்தைகளால் திட்டினார். ‘போடா, உன் வேலையை பாரு’ என்று திட்டிவிட்டு சென்றுவிட்டார். இத்தனைக்கும் அவர் காரில் வந்து இடிக்கவில்லை; புல்லட் பைக்கில் வந்துதான் மோதினார்.
திடீரென வந்து வண்டியில் மோதிவிட்டார்.. ‘என்ன அண்ணா இப்படி செய்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘என்னடா என்கிட்ட உன் வேலையை பார்த்து கொண்டு போடா’ என்று அருள் விக்னேஷ் திட்டினார்.
எம்எல்ஏடா நானு!
நான் உணவகத்தில் புரோட்ட மாஸ்டராக வேலை செய்கிறேன். தினக்கூலிக்கு வேலை செய்பவன் நான். இந்த ஹோட்டலில் ஒரு நாளுக்கு பல நூறு பேர் வந்து செல்வார்கள். அவர்களில் யாரோ காரை ரோட்டில் நிறுத்திவிட்டார்கள் போல..! அதற்காக வந்து என்னை திட்டினார். இதெல்லாம் பார்க்க மாட்டியா என என்னிடம் திட்டினார். அசிங்க அசிங்கமாக, தகாத வார்த்தைகளால் திட்டினார். ஏன் அண்ணா இப்படி திட்டுகிறீர்கள்? எதுவாக இருந்தாலும் ஓனரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. மதுபோதையில் வந்து நள்ளிரவில் திட்டி சென்றார். எம்எல்ஏ நானு இப்படி செய்யலாம் செய்யக்கூடாது என திட்டிவிட்டு சென்றுவிட்டார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சிக்கு எம்எல்ஏவாக அவர் வந்த பிறகு எந்தவொரு மாற்றமும் நடக்கவில்லை.. கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தவறுகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் செயல்பட்டது போலத்தான் இவர்களும் செயல்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருந்தாலும் சரி, ஊரில் உள்ள மற்ற அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எல்லாமே அப்படி தான் இருக்கின்றன. புதிதாக ஒன்றும் மாற்றம் தெரியவில்லை. கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே கல்லூரி பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளன. இப்போது அது தொடரவே செய்கிறது” என்றார்.
மதுபோதை
வண்டியில் இடிக்கும்போது அவர் மது அருந்தியிருந்தாரா என்று கேட்டபோது, “ஆமாம், அப்போது அவர் மது அருந்தியிருந்தார். இந்த சம்பவம் நடந்த 2 மாதங்கள் ஆகிவிட்டது” என்றும் அவர் கூறினார்.