ரசகுல்லா என நினைத்து வெடிகுண்டை சாப்பிட்ட நபர்: கடித்தபோது வாயில் வெடித்துச் சிதறி உயிரிழப்பு!

Spread the love

மத்திய பிரதேசத்தில் ரசகுல்லா என்று நினைத்து ஒருவர் வெடிகுண்டை சாப்பிட்டுள்ளார். அங்குள்ள திண்டோரி மாவட்டத்தில் இருக்கும் கோட்வாலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பதரியா சாந்தா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரா(35). இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த ராமபகத் பாரௌதியா என்பவர் ரசகுல்லா என்று கூறி ஒன்றைச் சாப்பிட கொடுத்தார். ராஜேந்திராவும் ரசகுல்லாதானே என்று நினைத்து கடித்து சாப்பிட முயன்றார். அந்நேரம் ரசகுல்லாவில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அவரது வாய் மற்றும் தாடையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடனே அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையின் போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து ராஜேந்திராவிற்கு ரசகுல்லா கொடுத்த ராமபகத்தை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “ராஜேந்திரா தனது குடும்பத்துடன் தனது இல்லத்தில் இரவு உணவை முடித்துவிட்டு குளிருக்கு நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, ​​சக கிராமவாசி ஒருவர் அவருக்கு இனிப்பு போன்ற வெடிகுண்டை கொடுத்தார். அது என்னவென்று கூட பார்க்காமல் ராஜேந்திரா அதனை வாயில் போட்டு கடித்தபோது இந்த சோகம் ஏற்பட்டது. இந்த வெடிபொருள் பொதுவாக காட்டுப்பன்றிகளை கொல்ல பயன்படக்கூடியது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் இந்த வெடிகுண்டை ராஜேந்திராவிடம் கொடுத்தார் என்றும், அவர் அதை எங்கிருந்து வாங்கினார் என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்”‘ என்று தெரிவித்தார். ராஜேந்திராவுக்கும், கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *