International
oi-Hema Vandhana
சர்வதேச அளவில் டிவி மற்றும் சினிமா துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக எம்மி விருதுகள் கருதப்படுகின்றன.. இந்த வாய்ப்பு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டு, ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தயாரிப்பாளருமான கவிதா குப்தாவின் முயற்சியால் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி பெருமை
முன்னதாக 2024ல் நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் எம்மி விழாவைத் தொகுத்து வழங்கிய நிலையில், இப்போது விஜய் சேதுபதி விருது வழங்கும் நபராகப் பங்கேற்கிறார். மேலும் இந்த ஆண்டுக்கான சர்வதேச எம்மி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் “ரியல் காஷ்மீர் ஃபுட்பால் கிளப்” தொடர் மற்றும் வீர்தாஸின் “ஃபூல் வால்யூம்” ஆகிய 2 இந்தியப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளது இந்தியாவிற்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.
இந்த விருதுக்கு அப்படியென்ன பெருமை? ஏன் இதுவரை இந்திய நடிகர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை? என்ற கேள்வியும் பரவலாக எழத்தான் செய்கிறது.
விருது விழா அமெரிக்காவில்
சினிமா துறையில் ஆஸ்கர் விருதுகள் எந்த அளவுக்கு உயரிய கவுரவமாக கருதப்படுகிறதோ, அதேபோல உலகளாவிய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தொடர் படைப்புகளுக்கு எம்மி விருதுகள் மிக உயரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றன.
இந்த விருது விழா ஒரு நாட்டின் தொலைக்காட்சி படைப்புகளை மட்டும் கொண்டாடுவதில்லை. பல்வேறு நாடுகளில் உருவாகும் தொடர்கள், ஆவணப்படங்கள், செய்தி நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான படைப்புகள் ஒரே சர்வதேச மேடையில் போட்டியிடுகின்றன.
54-வது சர்வதேச எம்மி விருதுப் போட்டி
இந்த ஆண்டுக்கான 54-வது சர்வதேச எம்மி விருது போட்டியில் 22 நாடுகளைச் சேர்ந்த 64 படைப்புகள் மற்றும் கலைஞர்கள் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த விருதின் சர்வதேச அளவிலான போட்டியையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்கா தவிர்த்து உலகளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் சிறந்த படைப்புகளை கண்டறிந்து கவுரவிக்கும் இந்த சர்வதேச மேடையில், வெற்றியாளர்களை அறிவித்து விருது வழங்கும் பொறுப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்திருப்பது சாதாரண விஷயமல்ல.
முதல் இந்திய ஆண் நடிகர்
இதுவரை சர்வதேச எம்மி விருது விழாவில் இந்திய நடிகர் ஒருவர் விருது வழங்கும் தொகுப்பாளராகப் பங்கேற்றதுமில்லை.. அதுக்காக இந்திய நடிகர்களுக்குத் தகுதி இல்லை என்றோ, இந்தியத் திரையுலகிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றோ அர்த்தமல்ல.
இதற்கு முன்பாக நடிகை பிரியங்கா சோப்ரா “பிரைம் டைம் எம்மி” விழாவில் விருது வழங்கியுள்ளார். அதேபோல நகைச்சுவை கலைஞர் வீர்தாஸ் சர்வதேச எம்மி விழாவை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால், சர்வதேச எம்மி மேடையில் ஒரு இந்திய ஆண் நடிகர் விருது வழங்கும் தொகுப்பாளராக பங்கேற்பது இதுவே முதன்முறை.
வரும் நவம்பர் 23-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளார்.
ஹாலிவுட் பக்கம் விஜய் சேதுபதி
ஹாலிவுட் திரைப்படைப்பாளர்களின் பார்வை இப்போது நம்முடைய இந்தியாவை நோக்கி திரும்பியுள்ள சூழலில், விஜய் சேதுபதியின் இந்த பங்கேற்பு இந்திய சினிமா உலகளாவிய சந்தையில் அடுத்தகட்டத்திற்கு நகர்வதற்கான முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
வெறுமனே விருது வழங்கும் நிகழ்வோடு இது முடிந்துவிடவில்லை. சமீபகாலமாகவே விஜய் சேதுபதியின் சர்வதேச மார்க்கெட் மதிப்பு புதிய உயரத்தை தொட்டு வருகிறது. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “மகாராஜா” திரைப்படம் சீனாவில் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததோடு, இப்போது அது ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் இதன் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளதுடன், ஆஸ்கார் விருது பெற்ற முன்னணி ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானாகே இதில் நடிக்கக்கூடும் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஃபர்ஸி, ஜவான் படங்களின மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி, இப்போது எம்மி விருது விழா மற்றும் ஹாலிவுட் ரீமேக் பேச்சுவார்த்தைகள் மூலம் சர்வதேசத் திரையுலகிலும் தன் ஆளுமையை நிலைநிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது…!!!

