கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த நீஷ்மா (30) ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து, பல லட்சம் ரூபாய் அளவுக்குப் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர். இந்தக் குழுவுக்கு கீர்த்தனா தலைவியாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கீர்த்தனாவை ஆசிரியர் பணியில் இருந்து பி.ஆர்.சி நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. இதற்கிடையே கீர்த்தனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

இவ்வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த கீர்த்தனா, நிபந்தனையின்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம்போல காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக நேற்று காலை 10 மணியளவில் வடகரா காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது காவல் நிலைய வளாகத்திலேயே வைத்து, பேருந்து ஓட்டுநரான ஜினீஷ் என்பவர் கீர்த்தனாவைத் திடீரென வழிமறித்துக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் பலத்த குத்துக் காயமடைந்த கீர்த்தனா, உடனடியாக மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கீர்த்தனாவை கத்தியால் குத்திய ஜினீஷை போலீஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.