எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; கணவர் வீட்டாரே கொலை செய்தது அம்பலம் – சிக்கியது எப்படி?

Spread the love

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் சாலையோரமுள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை சுரண்டை காவல் நிலைய போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

எரிந்த நிலையில் குட்டிமாரின் உடல்

சுரண்டையிலுள்ள ஒரு லாட்ஜில் இருந்து இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சேர்ந்து உடலை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி குட்டிமாரி என்பது தெரியவந்தது. தொடர்ந்து சுரண்டை லாட்ஜில் தலைமறைவாக இருந்த குட்டிமாரியின் கணவர் முருகன், முருகனின் தம்பி ரவி, முருகனின் தாயார் சிவகாமி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விவசாரணையில் திருமணம் மீறிய உறவில் இருந்தது காரணமாக குட்டிமாரியை 3 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து தனியார் வாழைத்தோட்டத்தில் உடலை வீசி எரித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சுரண்டை காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், “திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், கடையநல்லூர் பகுதியில் தங்கியிருந்து சுற்றுப்பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு டூ வீலர்களில் சென்று துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

குட்டிமாரியின் உடல் மீட்பு

இதில், குட்டிமாரி மட்டும் கடையநல்லூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கடையநல்லூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் குட்டிமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இரவில் வீட்டில் வைத்தும் அந்த இளைஞரிடம் குட்டிமாரி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இதை கணவர், கொழுந்தன், மாமியார் கண்டித்தும் அந்த இளைஞருடனான பழக்கத்தை அவர் கைவிடவில்லை. இதற்கிடையே தீபாவளியை முன்னிட்டு துணி வியாபாரம் சூடு பிடித்ததால் தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து மூன்று பேரும் தங்கி வந்துள்ளனர்.

குட்டிமாரி, மாலையில் பெட்ரோல் பங்கில் வேலையை முடித்துவிட்டு லாட்ஜூக்கு வந்து அவர்களுடன் இரவில் தங்கிவிடுவாராம். அங்கும் இரவில் அந்த இளைஞரிடம் பேசி வந்துள்ளார். இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன் “இனிமேல் பெட்ரோல் பங்கிற்கு வேலைக்குப் போக வேண்டாம். எங்களுடன் துணி வியாபாரத்திற்கு வர வேண்டும்” எனக் கூறியுள்ளனர். அதற்கு குட்டிமாரி மறுத்துள்ளார். இதனால், முருகன், ரவி, சிவகாமி ஆகிய மூவரும் குட்டிமாரியின் கழுத்தை நெரித்ததுடன் அடித்துள்ளனர்.

வாழைத் தோட்டத்தில் போலீஸார் ஆய்வு

இதில், அவர் இறக்கவே, குட்டிமாரியின் உடலை துணி மூட்டை கட்டுவது போல கட்டி டூவீலரில் வைத்து இரவில் எடுத்துச் சென்று வாழைத்தோட்டத்தில் வீசி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். துணி மூட்டைதானே எடுத்துச் செல்கிறார்கள் என நினைத்ததால் லாட்ஜ் மேலாளருக்கு சந்தேகம் வரவில்லை. மறுநாள் வழக்கம்போல் துணி வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். சி.சி.டி.வி கேமரா காட்சிகள், டூவீலரின் பதிவெண் ஆகியவற்றால் மூன்று பேரும் சிக்கிக் கொண்டனர். விசாரணையில் குட்டிமாரியை இரண்டு நாளாக காணவில்லை எனக் கூறியவர்கள் விசாரணையில் கொலை செய்து உடலை எரித்ததை ஒப்புக் கொண்டனர்.” என்றனர்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *