விவசாயக் காலத்தில் தீபாவளி வருவதுனால, இந்தத் தீபாவளியை மட்டும் நிறுத்திவிட்டு, திருக்கார்த்திகை திருவிழாவிலிருந்து மற்ற விழாக்களைச் சந்தோஷமாகக் கொண்டாடுவோம்னு அந்த காலத்தில் 70 வருஷத்துக்கு முன்னாடி கிராம முன்னோர்கள் எல்லாம் கூடி எடுத்த முடிவின்படி நடக்குறோம். இன்றைக்குப் பொருளாதாரத்தில் வளர்ந்திருந்தாலும், எல்லாரும் கொண்டாட முடியும் என்ற நிலை இருந்தாலும், முன்னோர்கள் காட்டிய அந்தப் பக்குவம், ஒற்றுமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், முன்னோர்களை மதிக்கக்கூடிய பண்பாடு இதையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தெரிஞ்சுக்குறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இன்னமும் இருக்கு.
அந்தக்காலத்தில் தீபாவளி அன்னைக்கு மட்டும்தான் பலகாரம் பண்ணுவாங்க; அதே மாதிரி புது வேட்டி, சேலை கட்டுவாங்க. இன்றைய வசதியில் எல்லா வீட்லயும் புது வேஷ்டி, புதுச் சேலையை அடிக்கடி கட்டிக்கிட்டே இருக்காங்க. பிள்ளைகள் எல்லாம் நிறைய புது ஆடை உடுத்திட்டு இருக்காங்க. அதனால அது ஒரு பெரிய விஷயம் இல்ல.
ஆனா, முன்னோர்கள் காட்டிய அந்த ஒற்றுமையும் கட்டுப்பாடும், பக்குவமும் இன்றைக்குப் பல இடங்களில் இல்லாம இருந்தாலும் கூட, நம்ம அதைப் பின்பற்றணும் அப்படிங்கிற அடிப்படையில்தான் அதை நாங்கள் இன்னைக்கும் பின்பற்றிட்டு இருக்கோம்.”
“தலை தீபாவளி’ கிடையாது:
வெளி ஊர்களில் இருந்து எங்கள் ஊருக்கு மணமுடித்து வரும் மருமகள்களுக்கு தீபாவளிப் பண்டிகை குறித்த விவரம் முன்பே தெரிந்திருக்கும். பெரும்பாலானோருக்குத் தெரிந்தே திருமணம் முடிந்து வருவார்கள். ஒருவேளை தெரியாத பெண்களாக இருந்தாலும், இந்த ஊருக்கு வந்தவுடன் அவர்களும் இந்த ஊரின் நடைமுறைக்குப் பழகிவிடுவார்கள். எனவே, எங்கள் ஊர்ப் பெண்களுக்கும் சரி, வெளியூரிலிருந்து இங்கு வரும் மருமகள்களுக்கும் சரி, எங்கள் ஊரில் ‘தலை தீபாவளி’ விருந்து கொடுக்கும் வழக்கமோ அல்லது தீபாவளியைக் கொண்டாடும் முறையோ கிடையவே கிடையாது.
இன்றைய காலகட்டத்தில் நம் கிராம இளைஞர்களிடம் கருத்துச் சுதந்திரம் இருந்தாலும், முன்னோர்கள் வகுத்தளித்த இந்தச் சுயக் கட்டுப்பாடும், பண்பாடும் நமது பரம்பரையின் ஒற்றுமையைக் காக்கும் அரணாக விளங்குவதை அவர்கள் உணர்ந்துள்ளனர். எங்களின் இந்தச் செயல் பல இடங்களில் வியப்பாகப் பார்க்கப்பட்டாலும், அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்தச் சுய ஒழுக்கத்தைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என்கிறார் பூரிப்புடன்
வறுமையின் காரணமாகவும், சமூகச் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் அன்று ஊர்க்கூடி எடுத்த ஒரு முடிவை இன்றுவரை கடைப்பிடித்து வருவது இந்த 12 கிராமங்களின் அசைக்க முடியாத ஒற்றுமையின் அடையாளமாகவும், தலைமுறை மாறினாலும் பண்பாட்டைப் பாதுகாக்கும் தனித்துவ அடையாளமாகவும் விளங்கி வருகிறது.