“எல்லா மீனும் இருக்கு… ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம்!” வடிவேலுவின் இந்தக் காமெடியைப் பார்த்து நாம் சிரித்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஜாமீன் என்பது ஒருவரின் சுதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான சட்ட நடைமுறை!
ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலே கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்குமா? தெரிந்துகொள்வோம்!
ஜாமீன் கிடைத்தால் வழக்கிலிருந்து விடுதலையா?
இல்லை! வழக்கு விசாரணை நடைபெறும் காலத்திலோ அல்லது சட்டப்படி வேறு பொருத்தமான நிலையிலோ, விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு காவலிலிருந்து வெளியே இருக்க அனுமதிப்பதுதான் ஜாமீன். ஜாமீன் கிடைத்துவிட்டால் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை என்று அர்த்தமல்ல.
எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா?
குற்றங்கள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை (Bailable), ஜாமீனில் வெளிவர முடியாதவை (Non-bailable) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களில், சட்டப்படி ஜாமீன் வழங்கப்படுவது உரிமையாகும். இதை BNSS பிரிவு 478 குறிப்பிடுகிறது.

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களில் (Non-bailable offences), ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் அது தன்னிச்சையான அதிகாரம் அல்ல. குற்றத்தின் தீவிரம், கிடைக்கும் ஆதாரங்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர் தலைமறைவாகும் வாய்ப்பு, சாட்சிகளைப் பாதிக்கும் அபாயம் மற்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நிபந்தனைகளைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.
இதற்கான முக்கியமான சட்டப்பிரிவு BNSS பிரிவு 480.
கைது செய்வதற்கு முன்பே ஜாமீன் பெற முடியுமா?
அரசியல்வாதிகள், பிரபலங்கள் “முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்” என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் என்ற நியாயமான அச்சம் இருந்தால், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரலாம். இதற்கான சட்டப் பிரிவு BNSS 482. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல; தகுதியுள்ள யாரும் கோரலாம். எனினும், எல்லா குற்றங்களிலும் முன்ஜாமீன் கோர முடியாது. குறிப்பாக, BNS பிரிவுகள் 65 மற்றும் 70(2)-ன் கீழ் வரும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு BNSS பிரிவு 482-ல் விதிவிலக்கு உள்ளது