தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் பேசிய இளம் சூறாவளி வைபவ் சூரியவன்ஷி, “ நாங்கள் பந்துவீசும்போது வெளியே அமர்ந்து ஆடுகளத்தைக் கவனித்தேன். அது பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. அதனால், தொடக்கத்தில் அவசரப்பட வேண்டாம், சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் பேட் செய்தால், அது மறுமுனையில் உள்ள பேட்டருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுவே எனது திட்டமாக இருந்தது.” என்றார்.

நிதானத்தின் பின்னணியில் நம்பிக்கை!
மெதுவாகத் தொடங்கினாலும், அரைசதத்தை வேகமாக எட்டியது குறித்துக் கேட்டபோது, “அதுதான் என் மனநிலை. என்னால் எப்போது வேண்டுமானாலும் இரண்டு மூன்று பவுண்டரிகள் அல்லது சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். அதனால், தொடக்கத்தில் அவசரப்படாமல், சிறிது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்” என்று தன்நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
வெளியுலகப் புகழ்ச்சிக்கு செவி சாய்ப்பதில்லை!
இளம் வயதில் கிடைக்கும் அதீத கவனம் மற்றும் புகழ்ச்சியை எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், பலரையும் ஆச்சரியப்படுத்தியது. “நான் அதிகமாக எதையும் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதில்லை. அதனால் இதைப் பற்றியெல்லாம் நான் பெரிதாக சிந்திப்பதில்லை. இது எனது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. நான் நீண்ட காலம் விளையாடினால், மக்கள் இன்னும் பல விஷயங்களைப் பேசுவார்கள். என் கவனம் ஆட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும், என் பயணத்தை நான் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று பக்குவமாகப் பேசினார்.

கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் தேடாதீர்கள்!
ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுவதன் பின்னணி என்ன என்று கேட்டதற்கு, “சார், எனக்கே தெரியாது. ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக எதையாவது செய்கிறேன். நான் அதைத் திட்டமிடுவதில்லை. அதற்குப் பின்னால் எந்த அர்த்தமும் இல்லை. கடந்த போட்டியில் நான் செய்த கொண்டாட்டத்திற்கும் கூட அர்த்தம் கிடையாது. நான் புதிய விஷயங்களை முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

இனி இலக்கு இறுதிப்போட்டி மட்டுமே!
இறுதிப்போட்டியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அணியின் மனநிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “எங்கள் கவனம் எல்லாம், ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அடுத்த போட்டியிலும் களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். ஒவ்வொருவரும் ஆட்டத்தில் கவனம் செலுத்தி, தொடர் முழுவதும் நாங்கள் விளையாடியது போலவே மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். இந்தத் தொடரில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் நல்ல கிரிக்கெட்டை விளையாடி போட்டிகளை வெல்வதே எங்கள் நோக்கம், அவ்வளவுதான்” என்று கூறி முடித்தார்.