“எழுந்திரு செல்லமே”.. கடலுக்கு அடியில் தாய்ப்பாச போராட்டம்.. ஆஸ்திரேலியாவை உலுக்கிய நெகிழ்ச்சி சோகம் | Mother Dolphin Carries Dead Calf on Her Back, Heartbreaking Video From Australia Goes Viral

Spread the love

International

oi-Hema Vandhana

சிட்னி: தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? இதோ இந்த செய்தியை பாருங்கள்.. கேட்டாலே யாருக்குமே நெஞ்சம் கரைந்துபோகும்! அப்படி ஒரு நெஞ்சைப் பிழியும் சோக சம்பவம் தான் இப்போது ஆஸ்திரேலியக் கடலில் அரங்கேறியுள்ளது… இது சம்பந்தப்பட்ட வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மேற்கு ஆஸ்திரேலிய கடலோர பகுதியில் டால்பின்களின் வாழ்வியலை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.. அந்தவகையில், “ஜியோகிராஃப் மேரைன் ரிசர்ச்” அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களது வழக்கமான கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்..

Dolphin

ஆஸ்திரேலியா டால்பின்

அப்போது அங்கே ‘ஃப்ராகிள்’ என்று ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் பெண் பாட்டில்நோஸ் டால்பின் ஒன்று நீந்திக் கொண்டிருந்தது. ஆனால், அது வழக்கம்போல் நீந்தவில்லை.. மாறாக, கையில் ஒரு குட்டியை வைத்து மிதக்க வைக்க போராடி கொண்டிருந்தது.. பிறந்து வெறும் 2 வாரங்களான அந்த குட்டியோ, இறந்து கிடந்தது.. இறந்த குட்டியை, எப்படியாவது மிதக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகவே, கடலில் நீந்திக் கொண்டிருந்தது!

இந்த காட்சியை பார்த்ததுமே ஆராய்ச்சியாளர்கள் அரண்டு போய்விட்டார்கள்.. அசைவற்றுப் போன தனது குட்டியின் உடல், கடலின் ஆழத்திற்கு மூழ்கிவிடக் கூடாது என்பதற்காகவே, தாய் டால்பின் தனது மூக்காலும் முதுகாலும் அதை மீண்டும் மீண்டும் நீரின் மேற்பரப்பிற்கு தள்ளி தள்ளி மிதக்க வைத்துக் கொண்டிருந்தது.

இறந்த குட்டியை சுமந்த தாய்

அப்போதுதான் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்தது.. தாய் டால்பினான ஃப்ராகிளுக்கு இது முதல் இழப்பு கிடையாது.. இதற்கு முன்பும், இதுபோல 3 குட்டிகளை இழந்துள்ளதாம்.. இப்போது உயிரிழந்துள்ளது 4வது குட்டியாகும்.. தொடர்ச்சியாகத் தனது 4 குட்டிகளையும் பறி கொடுத்துவிட்டு, தாய் டால்பின் தவித்துக் கொண்டிருக்கிறது.

கடும் குளிர்காலத்தில் குட்டி பிறந்தால், அது பிழைப்பது கடினமாம்.. பொதுவாகவே கடலில் குட்டிகள் இறந்துவிட்டால் அவை ஆழத்திற்கு மூழ்கிவிடும். ஆனால், தாய் டால்பின்கள் அந்த உடலை மூழ்க விடாமல் சில நாட்களுக்குத் தனது முதுகிலேயே சுமந்து திரியும்.. இதற்கு “துக்க அனுசரிப்புச் சடங்கு” (Mourning Ritual) என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்திருக்கிறார்கள்.

மூக்கால் தள்ளிய தாய்மை

அப்படித்தான் 4வதாக இறந்த குட்டியை, தாய் டால்பின் மூக்காலும், முதுகாலும் தள்ளி தள்ளி மிதக்க வைத்துள்ளது.. குட்டி நீரில் சரியத் தொடங்கும் ஒவ்வொரு முறையும், அதை மீண்டும் மேலே தள்ளி சுமந்து செல்லும் காட்சிகள் பார்ப்போரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், திடீரென ஒரு நெகிழ்ச்சியான காரியமும் நடந்துள்ளது. தாய் டால்பினுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும், ஆழ்கடலில் இருந்த மற்ற டால்பின்கள் எல்லாம் ஒன்றாக திரண்டு நீந்தி வந்துவிட்டதாம்.. அனைத்து டால்பின்களும்,ஃப்ராகிளுடன் இணைந்துள்ளன..

ஆஸ்திரேலியா கடலில் பாசப்போராட்டம்

இந்த காட்சிகளை ஆஸ்திரேலியாவின் கடல் ஆய்வு அமைப்பு வீடியோவாக பதிவு செய்து, இணையத்திலும் ஷேர் செய்துள்ளனர்.. உயிரினங்களின் பாசமும் தாய்மையின் ஆழத்தையும் எடுத்துக்காட்டும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வியந்துள்ளனர்..

“தாய்ப்பாசத்திற்கு எல்லையே இல்லை”, “விலங்குகளுக்கும் மனிதர்களைப் போலவே ஆழமான உணர்வுகள் உள்ளன”, “இந்த காட்சி மனதை கனக்க செய்கிறது” என்றெல்லாம் இணையவாசகிள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கடலில் வாழும் உயிரினங்களிலயே மிகவும் புத்திசாலித்தனமானது டால்பின்கள்.. மனிதர்களைப் போலவே ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியவை என்பது மீண்டும் ஒருமுறை இந்நிகழ்வின்மூலம் தெரியவந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *