கடந்து வந்த சவால்களும் கற்றுக்கொண்ட பாடங்களும்
திரையிசை உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஓர் உலகம். புதிய தொழில்நுட்பங்கள், புதிய இசை வடிவங்கள், புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் எனப் போட்டிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இத்தகைய சூழலில் ஒரு கலைஞன் தனது தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாகும்.
தேவாவின் பயணமும் மாற்றங்கள் நிறைந்த திரையுலகின் வழியாகவே அமைந்தது. புகழின் உச்சத்தை அடைவது மட்டுமல்லாமல், தொடர்ந்து பணியாற்றுவதும், வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப இசையை உருவாக்குவதும் ஒரு இசையமைப்பாளரின் திறமையை வெளிப்படுத்துகின்றன. தேவாவின் இசைப் பயணம் இத்தகைய உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், தனித்துவம் என்பது பிறரைப் போலச் செயல்படுவதில் இல்லை; தன்னிடம் உள்ள திறமையை உணர்ந்து அதைத் தொடர்ந்து வளர்ப்பதில்தான் உள்ளது என்பதாகும். பிறருடைய வெற்றியைப் பார்த்து தளர்ந்துவிடாமல், தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து உழைப்பதே நீடித்த சாதனைக்கான வழியாகும்.
இசை நிற்கலாம்; நினைவுகள் நிற்காது!
இன்னிசைத் தென்றல் தேவாவின் வாழ்க்கைப் பயணம் ஒரு இசையமைப்பாளரின் சாதனை வரலாறு மட்டுமல்ல; மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஒரு கலைஞனின் பயணமும் ஆகும். இசையின் மூலம் மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தி, எளிமையான மெட்டுகளால் எண்ணற்ற இதயங்களை வென்றவர் அவர்.
காலங்கள் மாறலாம்; இசையின் போக்குகள் மாறலாம்; புதிய தலைமுறைகள் புதிய இசைகளை விரும்பலாம். ஆனால் உண்மையான உணர்வுகளுடன் உருவாக்கப்படும் பாடல்கள் காலத்தைக் கடந்து வாழும். அந்த வகையில், தேவாவின் இசைத் தடங்கள் தமிழ்த் திரையிசை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன.
தென்றல் கண்ணுக்குத் தெரிவதில்லை; ஆனால் அதன் குளிர்ச்சியை உணர முடியும். அதுபோல, இசையமைப்பாளரின் உழைப்பு ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படாவிட்டாலும், அதன் இனிமையை உணர முடியும். இன்னிசைத் தென்றல் தேவாவின் இசைப் பயணமும் அத்தகைய ஓர் அனுபவம்தான். அவர் கடந்து வந்த பாதைகள், திறமையோடு விடாமுயற்சியும் இணைந்தால் சாதனையின் கதவுகள் திறக்கும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
-பா.நூருல்லாஹ்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
அல் அமீன் மேல்நிலைப்பள்ளி,
கே.புதூர்,
மதுரை.