ஐ.நா: `மரண தண்டனைக்குத் தடை விதிக்கும் தீர்மானம்’ – எதிராக வாக்களித்த இந்தியா | India has voted against the UN resolution calling for a moratorium on the death penalty.

Spread the love

உலக நாடுகளில் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில், ‘மரண தண்டனை பயன்பாட்டை நிறுத்தி வைத்தல்’ என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானத்தை மெக்சிகோ அறிமுகப்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 133 நாடுகளும், எதிராக 33 நாடுகளும் வாக்களித்தன.16 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. இதன் மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, குவைத், மாலத்தீவுகள், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

மரண தண்டனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதற்கு இந்தத் தீர்மானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்குரிய சட்ட அமைப்புகளை உருவாக்கவும், பொருத்தமான தண்டனைகளை நிர்ணயிக்கவும் அனைத்து நாடுகளுக்கும் உள்ள இறையாண்மை உரிமையை இத்தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், தண்டனை நிறைவேற்றுவதை அனைத்து நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *