திருச்செந்தூர் கோயிலில் நேற்று (நவ.15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அறநிலையத்துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் உணர்வுபூர்வமான இந்நிகழ்வில் பக்தர்களின் மனதை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையையும் பலிகொடுப்பதா?