இந்தச் சம்பவத்தின் தொடராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில், “மாவட்ட ஆட்சியரை சேம்பரில் தனியே சந்தித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இப்படி நீதிமன்ற நடவடிக்கைகள் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், விசிக-வின் துணைப் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான எழில் கரோலினிடம் பேசினோம். அவர், “நீதிபதிகளும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். இந்தியா என்பது அனைத்துச் சமூகத்தினரும், மதத்தினரும் வாழும் ஜனநாயக, சுதந்திர நாடு. எனவே, நீதிபதிகள் மற்றவர்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

சாதாரண எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில்தான் ‘நீதித்துறை பயங்கரவாதம்’ என்ற சொல் முன்வைக்கப்படுகிறது. சில நீதியரசர்கள் ‘இது கடவுளின் சித்தத்தால் நடந்தது’ எனக் கூறுவதும், பழங்காலச் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் அல்லது மனுஸ்மிருதி போன்றவற்றின் அடிப்படையில் தற்காலத்தில் தீர்ப்புகள் வழங்குவதும் கூடாது. அது நீதித்துறையின் இயல்புக்கு மாறானது. இந்த நாட்டில் நீதி என்பது புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும்.