பெண் ஆட்சியரிடம் 2 மணி நேரம் விசாரணை.. வன அதிகாரி, PROவிடமும் விசாரணை! அருள் விக்னேஷ் வழக்கில் பரபர | Arul Vignesh Case: Police Question Collector, Forest Officer and PRO in Obscene Message Complaint

Spread the love

Tamilnadu

oi-Vigneshkumar

கள்ளக்குறிச்சி: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு சென்ற அதிகாரிகள், வன அலுவலர் பிரியதர்ஷினியிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என தவெக தரப்பு கூறிய நிலையில், நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Arul Vignesh Case

அருள் விக்னேஷ்

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸிடம் பெண் கலெக்டர் நவம்பர் 23ஆம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜி காமினி விசாரணையை கண்காணித்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, மூத்த அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

2 மணி நேரம் விசாரணை

இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்த சிருஷ்டி சிங் மற்றும் ஐஜி காமினி ஆகியோர் முதலில் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் புகார் தொடர்பாக ஆட்சியரிடம் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, இந்திலியில் உள்ள மாவட்ட வனச்சரக அலுவலகத்துக்கு சென்ற அதிகாரிகள், வன அலுவலர் பிரியதர்ஷினியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமாரிடமும் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திப்பு

விசாரணையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட தென் மண்டல ஐஜி காமினி, உளுந்தூர்பேட்டை சென்றார். இதற்கிடையே திருப்பூர் எஸ்பி. சிருஷ்டி சிங் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பி. ஆகியோர் தியாகதுருகம் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்த பின்னர், சிருஷ்டி சிங் மீண்டும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றார்.

இதுவரை நடந்தது என்ன?

இதற்கிடையே புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அவரது வீட்டுக்கு சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனை அளித்தார். இந்த வழக்கில் யாருக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது என்றும், விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. மேலும், பெண் அதிகாரியின் புகார் தொடர்பாக விசாரிக்க நான்கு பேர் கொண்ட உள் புகார் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த வழக்கு இப்போது பரபரப்பாகியுள்ள நிலையில், ஆட்சியர், வனத்துறை அதிகாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் என அடுத்தடுத்து பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *