தமிழ் சினிமாவில் திறமை இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை கைதூக்கி விடும் ஹீரோக்களில் சசிகுமாருக்கு தனி இடம் உண்டு. 10க்கும் மேற்பட்ட இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். “டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மை லார்டு’ படங்களின் வெற்றிக்கு பின் அடுத்து கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். கதை தேர்விலும் சமூக அக்கறையுடன் கவனம் செலுத்தும் சசிகுமார், இப்போது நடித்து வரும் படங்களின் அப்டேட் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை இது.
புதுமுக இயக்குநர்களின் படங்களை தேர்வு செய்வது குறித்து நமக்களித்த பேட்டியில் கூட அவர், “கடவுள் எனக்கு அப்படி ஒரு கொடுப்பினை கொடுத்திருக்கிறதா நினைக்கறேன். ஒருத்தரோட திறமையை வளர்த்து விடுவதில் உறுதுணையா இருப்பது பெருமையா இருக்கு. யாருக்கும் கிடைக்காத ஒரு விஷயம் எனக்கு கிடைத்தது என்பதும் சந்தோஷம்” என சொல்லியிருக்கிறார். ராஜூமுருகன் இயக்கத்தில் நடித்த ‘மை லார்ட்’ படத்திற்கு பின் ‘எவிடென்ஸ்’ நாநா’, மீண்டும் ராஜூமுருகனின் படம், ‘வதந்தி2’ வெப்சீரிஸ் என பிசியாக உள்ளார்.
அடுத்து ‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை இயக்கிய ஆர்.டி.எம். டைரக்ஷல் ‘எவிடென்ஸ் #8’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஃபேமிலி க்ரைம் டிராமாவான இதில் வெட்டிங் போட்டோகிராபராக நடிக்கிறார். சசிகுமாரின் அப்பாவாக கஸ்தூரி ராஜா நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன.
