வங்கிக் கடன் கட்ட முடியாத நிலையில் தன்னுடைய வீடு ஏலத்தில் போனதையடுத்து, தனக்கு குடியிருக்க ஒரு வீடு ஒதுக்கித் தர வேண்டுமென மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்ததை அறிவீர்கள்.
இது தொடர்பாக விகடன் தளத்துக்குப் பிரத்யேகமாகப் பலமுறை பேசியிருந்தார் தாரா.
இந்த நிலையில் தற்போது தாராவுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டு மனை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு இந்த வீட்டு மனையை ஒதுக்கித் தந்துள்ளது தமிழக அரசு.
ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகரன் கோவிட் காலத்தில் சென்னையில் மரணமடைந்தார். இறக்கும்போது சென்னை வடபழனியில் வங்கியில் கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியிருந்ந்தார். திடீரென அவர் இறந்த நிலையில், அவர் மனைவி தாராவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகவே, வீட்டை வங்கி ஏலம் விட்டு விட்டது. எனவே குடியிருக்க வீடு இல்லாத காரணத்தால் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடு ஒதுக்கித் தரவேண்டி முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று மனு அளித்தார் தாரா. ஆனால் எந்த பலனும் கிடைத்தபாடில்லை.