ஒரு ஏக்கர் பரப்பில் 38 ரக மாம்பழங்கள்! கோவை மாவட்டத்தில் வெளிநாட்டு மாம்பழங்கள் சாகுபடி – Kumudam

Spread the love

விவசாயப் பரப்பு சுருங்கிக் கொண்டே வரும் அதேவேளையில் உணவுத் தேவையோ அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த யதார்த்த குழல் முரண்பாடாக இருந்தாலுமே, அதைச் சமாளிக்க வேண்டிய பெரிய பொறுப்பு விவசாயிகளின் தோளில் தான் இருக்குகிறது. உங்களின் அதீத தேவையை எங்களால் தீர்க்க முடியவில்லை என்று மக்களை பசிப்பட்டினியில் விட்டுட்டு விவசாயிகளால் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது அப்படி செய்பவர்கள் விவசாயிகளாக இருக்கவும் முடியாது. அப்படியென்றால் என்னதான் இதற்கு தீர்வு” மாற்றி யோசித்தலும், பரிசோதனைகளும், ஆராய்ச்சி மற்றும் முறைகளும்தான் இந்தச் சவாலான சூழலுக்கான சமர்த்தான பதிலைத் தேடித்தரும். இதை உணர்ந்து நாடெங்கும் பல விவசாயிகள் வேளாண்மையில் பரிசோதனை முயற்சிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறார்கள். அவர்களில் பலர் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பதிவு செய்து வருகிறார்கள். இது பரிசோதனைக் களம் என்பதால் வருவாய் மற்றும் அதிக லாபம் என்பதெல்லாம் இல்லாமல், முதலீட்டைவிட ஆரோக்கியமான லாபத்தை சம்பாதித்தபடி பெரிய புரட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். இது முழுமையாக வெற்றியடையும்போது லாபத்தின் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும். 

அப்படி பரிசோதனை முயற்சியில் வெல்லும் விவசாயிகளில் ஒருவர்தான் கோவை மாவட்டம், தீத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இயற்கை மா விவசாயி அரவிந்த். ஒரு ஏக்கர் நிலத்தில் பல நாடுகளை சேர்ந்த 38 வகையான மாமரங்களை வளர்த்து வருகிறார். இதில் கவனிக்கத்தக்க விஷயமென்னவென்றால், பூரண இயற்கை முறையில் வளர்க்கப்படும் இந்த மா மரங்கள் அமோகமான விளைச்சலை தரத் துவங்கியுள்ளன அதுவும் எட்டே அடியில். ஆம்! இம்மரங்கள் அதிகபட்சமாக எட்டு அடி உயரம்தான் வளர அனுமதிக்கப்படுகின்றன. அதற்குள்தான் விளைச்சல் மேஜிக்கை நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஐ.டி. வேலை டு மா விவசாயி!

அரவிந்தை அவரது தோட்டத்தில் முதுகலை சந்தித்தோம். “கோவையில பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வழக்கம்போல ஐ.டி. கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். நம்ம நாட்டுக்குள்ளே, அமெரிக்கான்னு சுமார் 15 வருஷம் அப்படியே போச்சு. அதுக்குப் பிறகு எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டுச்சு. வேற பிசினஸ் பண்ணலாம், ஆனால் அது மக்களுக்குப் பயனுள்ளதா இருக்கணும்னு நினைச்சேன். வேற யோசனையே இல்லாமல் விவசாயத்தைத் தேர்வு பண்ணினேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாடி கிளம்பி மறுபடியும் கோவை வந்துட்டேன். விவசாயம் செய்வதற்காக என்னைத் தயார் பண்ணிக்க ஆரம்பிச்சேன்.
நான் ஏன் விவசாயத்தைத் தேர்வு செய்தேன் அப்படின்னா உணவு எல்லாத்துக்கும் தேவை, அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவு. கொரோனாவுக்குப் பிறகு எது நல்ல உணவு, கெட்ட உணவுன்னு மக்களுக்குத் தெரியுது. அதனால் எது நல்ல உணவோ அதைக் கொடுக்க நினைச்சேன். இன்னைக்கு பல வகை தொழில் துறையின் வளர்ச்சியாலேயும், மக்கள்தொகை பெருக்கத்தாலேயேயும் விளைநிலத்தின் அளவு குறைஞ்சுட்டே வருது. ஆனால், உணவுத்தேவை அதிகரிச்சிருக்குது. ஆக ரெண்டையும் சமாளிக்க மாற்று முயற்சி தேவை.

சிங்கப்பூரில் வீட்டு மாடியில் உணவுப் பொருள் உற்பத்தி பண்றாங்க. இந்தியாவும் அந்த சிஸ்டத்துக்கு மாறிட்டு வருது, இன்னும் மாறணும். இங்கே நல்ல உணவுக்குத் தேவை இருக்குது. குறிப்பா பாரம்பரிய உணவுக்கு ரொம்ப நல்ல வரவேற்பு இருக்குது. சரி, என்ன சாகுபடி பண்ணலாம்னு யோசிச்சேன். காய்கறிகள் விளைய வெச்சால் தினமும் பல மணி நேரம் உழைக்கணும். அது எனக்கு இப்போதைக்கு முடியாது. இன்னும் சில வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்குது.

அதனால் பழங்கள் உற்பத்திக்கு பிளான் பண்ணினேன். அப்பதான் மாம்பழ சாகுபடி எனக்கு மனசுல பட்டுச்சு. நான் எப்பவுமே இயற்கையோடு இணைந்து வாழ ஆசைப்படுறவன். மேலும் சத்தான, ஆரோக்கியமான, நோய்களை உருவாக்காத பழத்தை மக்களுக்குக் கொடுக்க நினைச்சேன். அதனால் பூரண இயற்கை முறையில் விவசாயம் பண்ண முடிவெடுத்தேன். அதற்காக நிறைய கத்துக்கிட்டேன், படிச்சேன். எந்த எந்த மாசம் சூடு அதிகமிருக்குது. மழை எப்போ கிடைக்குது, எல்லாமே ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கேன். பூச்சி தாக்குதல் என்னென்ன, எப்பல்லாம் வரும்னுதெளிவாக ஃபைல் பண்ணிட்டுதான் மாம்பழ சாகுபடியை கொண்டு போக ஆரம்பிச்சேன். அதிலும் சில பரிசோதனைகளை விவசாயத்தில் பண்ணி அதில் தெளிவும், வெற்றியும் பெற விரும்பினேன்.

ஒரு ஏக்கரில் 38 ரகம் மாம்பழம்!

ஒரு ஏக்கர் நிலத்தை கையில் எடுத்து முதலில் மண்ணை வளப்படுத்தினேன். இயற்கை உரங்கள் இதற்கு பெரிதா உதவுச்சு. அப்புறம் நம்ம நாடு உட்பட சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட பல நாடுகளின் 38 ரக மா மரக் கன்றுகளை இறக்குமதி செய்து நடவு செய்தேன். தண்ணீர் பாய்ச்சலுக்கு சொட்டு நீர் அமைத்தேன், ஆனால் டியூபை வெளியில் போடாமல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் அமைத்தோம்.
வெளிநாட்டு மா மரம் இங்கே வளருமான்னு சிலர் கேட்டாங்க. உண்மையிலேயே மாம்பழம் இந்தியாவிலிருந்துதான் பல தேசங்களுக்கும் போனது. அதனால் இந்த மண்ணுல அந்த மரங்கள் ரொம்ப சீக்கிரமே வேர் பிடிச்ச வளர ஆரம்பிச்சதுங்க. சொல்லப்போனால் அந்தநாட்டைவிட இங்கே பெரிய சைஸிலும், சூப்பர் சுவையிலும் அறுவடையை தருதுங்க. இந்த மா ரகங்கள் நாற்பது வருட ஆயுள் உடையவை. ஆனால் நாம கருத்தாக கவனித்தால் கூடுதலாக பல வருடங்கள் நின்னு பலன் கொடுக்கும்” என்றவர்.

என்னென்ன உரம்?

“மா கன்றுகள் நடவு செய்து வளர்க்கையில் ஏற்கெனவே மண் வளப்பட்டு இருந்ததால் வளர்ச்சி சிறப்பா இருந்தது. இது தவிர வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகவ்யம், கோ க்ருபா அமிர்தம், மீன் அமிலம், வாழை மையமாக வெச்சு நாங்களே தயாரிக்கும் சத்து டாக்னிக்ன்னு அந்தந்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி கொடுக்கிறேன். நோய்த் தாக்குதல் பெரிதாக இல்லை. இலை சுருள்வது, கருகுறதுன்னு ஏதாவது ஒன்றிரண்டு மரங்களில் இருந்தாலும் அதற்கேற்ற நாட்டு மருந்து கொடுத்து சரி பண்ணிடுறோம்.

பூச்சி தாக்குதலைப் பொறுத்தவரை வெள்ளைப் பூச்சி அப்பப்ப ஏறும், ஜஸ்ட் அதை கைகளால் தட்டிவிட்டே சரி பண்ணிடுறேன். என் தோட்ட மரங்களை அதிகளவு எட்டு அடி உயரம்தான் வளர விடுறோம். அதற்கு மேல் துளிர்க்கையில் கட் பண்ணிடுறேன். சைடிலும் அதிகம் வளர அனுமதிப்பதில்லை. இந்த உயரத்தில், இந்த அகலத்தில் சிறப்பான அறுவடை பார்ப்பதுதான் எனது இலக்கே. நல்ல சத்துக்கள் கொடுக்கையில் உண்மையில் சிறப்பான மகசூலை நமக்கு அவை தரும். என் தோட்டத்தில் அது நிரூபணமாகிட்டு இருக்குது. நட்ட மூன்றாவது வருடத்தில் இருந்தே விளைச்சல் துவங்கிடுச்சு.

எட்டு அடி உயர மரத்தில் எவ்வளவு விளைஞ்சுடும்னு நினைச்சாங்க. ஆனால், நார்மலா ஒரு மரத்தில் 5, 15, 20ன்னு விளைச்சல் கிடைக்குது. மிக அதிகமான எடையில் விளைச்சல் இருக்குது. அதுவும் பூரண இயற்கை முறையில் விளைந்த, வேற்று தேசத்து மாம்பழம் என்பதால் ஆன்லைன் புக்கிங் மற்றும் நேரடியாக தோட்டத்துக்குவந்தே வாங்கிட்டுப் போயிடுறாங்க. இப்போதைக்கு என்னால் வருமானம், லாபம் பற்றி பெருசா பேச முடியாது. காரணம், சிறிய விவசாயப் பரப்பில், சிறிய அளவிலான தாவரத்தில் அமோகமான சாகுபடி பெறுவதுதான் என்னோட டார்கெட். அது படிப்படியா நிறைவேறிட்டு இருக்குது. மண்ணை வளப்படுத்தி, பூரண இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான அளவில் மகசூல் கிடைக்குது.

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் தோட்டத்தில் சற்று கஷ்டப்பட்டு உழைத்தும், ஒவ்வொரு மரத்தையும் தெளிவாக கவனிச்சுட்டு வந்து விவசாயம் பண்ணினாலே அமோகமான மகசூலையும், அதன் மூலம் மிக சிறப்பான லாபத்தையும் பெறலாம்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அரவிந்த்.
வேளாண் துறையிலும் தமிழக இளைஞர்கள் சாதனையாளர்களாக பெருக வேண்டும்!

எழுதியவர்- எஸ்.ஷக்தி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *