அப்போது கூட்டத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்களையும் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நகர்மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி, படங்களை வைக்க அனுமதி அளித்தார்.
திமுகவினர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்ததைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் உடனடியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எடுத்து வந்து வாழ்க கோஷமிட்டபடி சுவரில் மாட்டினர்.
இரு கட்சியினரும் போட்டிப் போட்டுக் கொண்டு தலைவர்களின் படங்களை மாட்டியதால் நகர்மன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பும், பதற்றமும் நிலவின.
அதற்குப் பின்புதான் வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்து, “நகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் குவிந்து நாற்றமடிக்கிறது. கழிவு நீர் வீதியில் ஓடி நோய் பரப்புகிறது. தெரு விளக்குகள் எரியாததால் பல தெருக்களில் இரவில் நடமாடவே அச்சமாக உள்ளது.
சாலைகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அலுவலர்கள் அமைதியாக உள்ளனர்.
கேள்வி எழுப்பி தீர்வு காண வேண்டிய நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களின் படஙகளை வைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்” என்று கிருஷ்ணகிரி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.