ஒரு காலத்துல எப்படி இருந்தேன்… இப்படி ஆக்கிட்டாங்களே..ஏஐ வீடியோவில் மிரட்டும் ஆனந்தராஜ்! – Kumudam

Spread the love

ஒரு காலகட்டத்தில் ஆனந்தராஜை திரையில் பார்த்தாலே பலருக்கும் கோபம் வரும். ஏனென்றால், அவர் ஏற்று நடித்த அத்தனை வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டியிருப்பார். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிகராக இருந்தவர் ஆனந்தராஜ்.

குறிப்பாக, ‘சிம்மராசி’ படத்தில் மருதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் அரக்கத்தனமான வில்லனாகப் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

ஜாதி ஆணவம் பிடித்த மனிதராகவும், தனது அதிகாரத்தையும் திமிரையும் காட்டிக்கொண்டு வரும் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து அப்போது பலரும் திட்டியிருப்பார்கள். ஆனால், இப்போது அதே மருதநாயகத்தைப் பார்த்து இணையத்தில் பலரும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்குக் காரணம், ஆனந்தராஜின் அந்தப் பழைய கெட்டப்பை வைத்து வெளியாகும் விதவிதமான வீடியோக்கள்தான். அதிலும், ‘சிம்மராசி’ படத்தில் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துக் காரி துப்பிவிட்டு, “தோத்துக்கிட்டே இருக்கியேடா!” என்று பேசும் அந்த டயலாக், தற்போது பார்ப்பவர்களுக்குச் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

ஏஐயில் மிரட்டும் ஆனந்தராஜ்

இந்நிலையில், தற்போது வெளியாகும் AI வீடியோக்களிலும் ஆனந்தராஜின் பழைய காட்சிகளைப் பயன்படுத்தி வேற லெவலுக்குக் கலாய்த்து வருகின்றனர். அந்தக் காட்சியில் அவரது முகபாவனையும், பேசும் விதமும் ஏற்கெனவே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவை. இப்போது அதையே வேறு வேறு சூழல்களில் பொருத்திப் பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், ‘ஏழுமலை’ படத்தில் ஆனந்தராஜ் பேசும், “அடங்கொப்பம்… தாமிரபரணியில தல முழுக…” என்ற டயலாக்கையும் நினைவுபடுத்தும் வகையில் சில வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

பழைய படங்களில் அவர் பேசிய வசனங்களை எடுத்து, இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதுதான் இந்த வீடியோக்களின் ஸ்பெஷல். ஆனந்தராஜின் முகத்தைப் பார்த்தாலே அந்த வசனங்கள் நினைவுக்கு வந்துவிடும் என்பதால், ஒவ்வொரு வீடியோவிலும் அவருடைய பழைய கெட்டப்புக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஆனந்தராஜை மட்டும் வைத்து வீடியோக்கள் உருவாக்கப்படவில்லை. அவருடன் சேர்த்து பழைய படங்களில் மிரட்டிய மற்ற வில்லன்களையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

‘நாட்டாமை’ படத்தில் நடித்த பொன்னம்பலம், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் மிரட்டிய மன்சூர் அலிகான் எனப் பலரையும் ஒன்றாகச் சேர்த்து ஜாலியான காட்சிகளை உருவாக்கி வருகின்றனர்.

90-ஸ் வில்லன்கள் கூட்டணி

குறிப்பாக, ஜிம்மில் மருதநாயகமாக ஆனந்தராஜ், பொன்னம்பலம், மன்சூர் அலிகான் என அனைவரும் ஒன்றாக வொர்க் அவுட் செய்வது போன்ற வீடியோக்கள் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கின்றன.

ஒரு காலத்தில் ஹீரோக்களைத் துரத்தித் துரத்திப் பயமுறுத்தியவர்கள், இப்போது ஜிம்மில் ஒன்றாக நின்று உடற்பயிற்சி செய்வது போலக் காட்டப்படுகிறார்கள். அதிலும் ஒருவரை ஒருவர் தண்ணீருக்குள் தள்ளிவிடுவது, விளையாட்டாகச் சண்டை போடுவது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது என ஒவ்வொரு வீடியோவிலும் புதுப்புது காமெடி காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

எப்படிப்பட்ட வில்லன்!

ஆனால், இந்த வீடியோக்களைப் பார்த்து சில ரசிகர்கள், “ஒரு காலத்தில் ஆனந்தராஜ் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா? அவருடைய நடிப்பைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருக்கிறார்கள். இப்போது அவரை வைத்து இப்படியெல்லாம் வீடியோ போடுகிறார்களே” என்று வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பழைய ஆனந்தராஜின் மிரட்டலான வில்லன் நடிப்பை ரசித்தவர்களுக்கு, அவர் சமீபகாலமாக நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பது கொஞ்சம் ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனந்தராஜின் வேண்டுகோள்

இதற்கிடையில், இந்த வீடியோக்கள் குறித்துப் பேசிய ஆனந்தராஜ், அவற்றைப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது என்றும், தானும் அவற்றைப் பார்த்துச் சிரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதால், குடும்பத்தினர் இந்த வீடியோக்களைத் தனக்குக் காட்டியதாகவும், அவற்றைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், யாரையும் அசிங்கப்படுத்தும் வகையில் இல்லாமல் வீடியோக்களை வெளியிட்டால் நல்லது என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆக, ஒரு காலத்தில் “தோத்துக்கிட்டே இருக்கியேடா” என்று கண்ணாடியைப் பார்த்து மிரட்டிய மருதநாயகம், இப்போது அதே காட்சிகளால் இணையத்தில் பலரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *