திருச்சுழியல் தலத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு. பாண்டிய நாட்டை, அழகானதொரு பெண்ணாக உருவகம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணின் அவளின் நாபிதான் திருச்சுழியல் எனும் இந்தத் தலம் என்று சித்திரித்துப் போற்றுகிறார், திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதியார்.
இங்கு வந்து திருமேனி நாதரைக் காலையில் தொழுதால், பரிமேத வேள்வி… அதாவது அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். உச்சிப்போதில் வணங்கினால், ராஜ சூய யாகத்தின் பலன் கிடைக்கும்; மாலையில் வழிபட்டால், ஜீவன்முக்தி கிடைக்கும் என்கிறது தல வரலாறு.

மற்ற சிவாலயங்களில் ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால் கிடைக்கும் பலன், இந்தத் தலத்தில் சிவராத்திரி அன்று ஒரேயொரு வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்தாலே கிடைத்து விடுமாம். இந்தத் தலத்தில் அன்பர்களுக்கு ஒரு பிடி அன்னமிட்டால், ஆயிரம் அஸ்வமேத யாகங்களின் பலன் கண்டிப்பாக உண்டு. இந்தத் தலத்தை அடைந்தாலே போதும், அறிந்தோ அறியாமலோ பண்ணிய பாவமெல்லாம் பஞ்சாகப் பறக்கும் என்கின்றன ஞானநூல்கள்.