சேலம் மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பவர்லூம் தறிகளின் ஓசையும் பட்டுச் சேலைகளின் ஜொலிப்பும்தான். குறிப்பாக, இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டுச் சேலைகள் தினமும் தயாராகி, தமிழகம் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தத் தொழிலில், தறியில் இருந்து இறங்கும் சாதாரணத் துணிக்கு ஜும்கி ஸ்டோன்கள் ஒட்டுவது, கைமுடிச்சுகள் போடுவது தொடங்கி, வாடிக்கையாளர்களின் கைகளை அடையும் முன் அதை அழகாக விசிறி வடிவில் மடித்துத் தயார்படுத்தும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் கைவண்ணம் இருக்கிறது.
குறைந்த கூலி மற்றும் உடல் வலிகளைத் தாண்டி, குடும்பத்தின் பொருளாதாரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் இவர்களின் உழைப்பு பெருமைக்குரியது. அந்தப் பெண்களின் வாழ்வியலையும் உழைப்பின் கதையையும் பார்ப்போம்…
ஜும்கி ஸ்டோன்கள்: பொறுமையும் நுணுக்கமும் நிறைந்த முதல் அடி!
“காலை எட்டு மணிக்கு வேலை ஆரம்பிச்சா, சில நேரம் ராத்திரி பத்து, பதினொரு மணி வரைக்கும்கூட வேலை பண்ணுவோம். தீபாவளி, பொங்கல், முகூர்த்த சீசன் நேரங்கள்ல நிறைய வேலைகள் இருக்கும்; அந்த சீசன்ல ₹15,000 வரைக்கும்கூட சம்பாதிக்க முடியும். ஆனா, மத்த நாள்கள்ல வாரத்துக்கு மூணு, நாலு நாள்கள் மட்டும்தான் வேலை இருக்கும்.
அந்த டைம்ல ஒரு நாளைக்கு ₹300-லிருந்து ₹400 வரைக்கும் சம்பாதிக்க முடியும்” என்கிறார், இளம்பிள்ளையைச் சேர்ந்த பெண் தொழிலாளி உமா.
நீளமான மர மேசைகளின் மீது பட்டுச் சேலைகளை முழுவதுமாக விரித்து வைத்து, அதன் டிசைனுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜும்கி ஸ்டோனையும் மிகுந்த பொறுமையுடன் ஒட்டும் பணி மிக நுணுக்கமானது.
ஜும்கி ஸ்டோன்களை ஒட்டுவதற்கு இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் முறையில், ஒவ்வொரு ஜும்கி ஸ்டோனையும் கையால் எடுத்து, டிசைனுக்கு ஏற்ப பசை தடவி ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டுகின்றனர்.
இரண்டாவது முறையில், அந்த டிசைன்களுக்கு ஏற்பத் தனித்தனி அட்டைகள் இருக்கும். அந்த அட்டைகளின் மீது ஜும்கி ஸ்டோன்களைப் போட்டு, அதன் மீது ஸ்டிக்கரை ஒட்டி எடுப்பார்கள். பிறகு, அந்த ஸ்டிக்கரைச் சேலையின் டிசைன்களுக்கு ஏற்ப அதன் மீது வைத்து, அயர்ன் பாக்ஸின் வெப்பத்தின் மூலமாக அந்த ஜும்கி ஸ்டோன்களைப் பதிப்பார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஸ்டிக்கரை அகற்றியவுடன், ஜும்கி ஸ்டோன்கள் சேலையின் டிசைனுக்கு ஏற்ப அழகாகப் பதிந்துவிடும்.
ஒவ்வொரு சேலைக்கும் பயன்படுத்தப்படும் ஜும்கி ஸ்டோன்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சேலையின் டிசைன், பார்டர் மற்றும் வேலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து ஜும்கி ஸ்டோன்களின் எண்ணிக்கை மாறுபடும். அதனால், இந்தப் பணிக்கான கூலியும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும் சேலையின் முழு அழகும் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பணியில் பெண்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுகின்றனர்.