ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் வேரறுக்கப்பட வேண்டும்!

Spread the love

தமிழகத்தை உலுக்கியிருக்கும் வீரமணி மீதான சிறார் பாலியல் வழக்கு, நம் சட்ட, நீதி பரிபாலன முறைகள் மீது அழுத்தமான கேள்வியை எழுப்பியிருக்கிறது. நெடுங்காலமாக நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிற இந்தக் கொடூரம், நீதிமன்றத்தின் உறுதியான நடவடிக்கையால் தற்போது வெளிவந்திருக்கிறது. வன்கொடுமைக்கு உள்ளான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தாய் புகார் செய்திருக்கிறார்.

சிறுவயதில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் குழந்தைகளுக்கு அதன் தாக்கமும் வலியும் காலம் முழுவதும் நிலைத்திருக்கும். உலகளவில் 8 பெண்களில் ஒருவருக்கு, 18 வயதுக்கு முன்பே ஏதோவொரு வகையில் பாலியல் தாக்குதல் நடப்பதாக UNICEF மதிப்பிடுகிறது. பாலியல் வன்முறை யின் தாக்கம், உடல், மனம், கல்வி, சமூக உறவுகள், எதிர்கால வாழ்க்கை வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆற்றுப்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இல்லை என்பது பெரிய அவலம்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், ராணுவ வீரர்களின் பாலியல் விருப்பத்தைத் தீர்ப்பதற்காக காலனி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சிறுமிகளையும் பெண்களையும் கொண்டு சொகுசு நிலையங்களை (Comfort Stations) உருவாக்கியது ஜப்பான் ராணுவம். ஏராளமான சிறுமிகளும் பெண்களும் அந்தக் கொடுமைகளை அனுபவிக்க முடியாமல் அங்கேயே உயிரிழந்தார்கள். தப்பி வந்த பலர் பெரும் மன சிக்கலுக்கும் உடல் சிக்கலுக்கும் உள்ளாகி இறந்தார்கள்.

2005-ல், அமெரிக்க நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பான ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ உலகத்தையே அதிர்ச்சியுறச் செய்தன. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என இதில் சம்பந்தப்பட்ட பெயர்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்றுவரை அடங்கியபாடில்லை. கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொள்ள, அந்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

ஒரு நாகரிக சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது வெட்கித் தலை குனிய வேண்டிய அவமானம். நம் பாதுகாப்பு, விசாரணை கட்டமைப்பின் வெட்கக்கேடான தோல்வி. NCRB தரவின்படி இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 7 முதல் 8 வழக்குகள் போக்சோ சட்டப்படி பதிவாகின்றன. ஆனால், விசாரணை அமைப்பில் உள்ள குறைபாடுகள், குற்றவாளிகளின் சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலான வழக்குகளில் குற்றமிழைத்தவர்கள் தப்பி விடுகிறார்கள். தமிழ்நாட்டில் சராசரியாக 4-ல் 1 போக்சோ வழக்கில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது.

தற்போது தமிழகத்தைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள வீரமணி வழக்கில்கூட, புகாரளிக்கப்பட்ட காலத்துக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட காலத்துக்குமான இடைவெளி மிகப்பெரிதாக இருக்கிறது. `போதிய ஆதாரம் இல்லை’ என காவல்துறை `Further Action Dropped’ அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் நீதிமன்றம் அதை நிராகரித்து மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டதால்தான் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுபோன்ற வன்கொடுமைகளில் ஈடுபடும் அதிகார மனிதர்களையும், அவர்களுக்குத் துணை போகும் மையங்களையும் அரசின் விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்து அந்த வலைப்பின்னலைத் தகர்க்க வேண்டும். குற்றமிழைத்த, துணைபோன அத்தனை பேருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு முழுமையான ஆதரவு தந்து அவர்களின் மனக்காயங்களை ஆற்றுவதற்கான தீர்க்கமான ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும்.

சமூக ஆரோக்கியத்தையே கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற களைகளை வேரறுப்போம். குழந்தைகளைப் பாதுகாப்போம்!


உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *