இதனைத் தொடர்ந்து, ரூ. 24 கோடிசெலவில் நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவிற்கு வந்தபோது ஒரு எதிர்பாராத நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது.
வழக்கமாக இதுபோன்ற அரசுப் பணிகளைத் திறக்கும் விழாக்களில் வி.ஐ.பி-க்களோ அல்லது அமைச்சர்களோதான் ரிப்பன் வெட்டுவது வழக்கம்; ஆனால், அதற்குமாறாக, பொதுமக்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளான அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரை அருகில் அழைத்தார் முதலமைச்சர் விஜய்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அழைத்து கைகளுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு ரிப்பனை வெட்டிப் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். அடித்தட்டு மக்களின் உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் முதலமைச்சரே ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் முன்னுரிமை அளித்து ரிப்பன் வெட்டச் செய்த இந்தச் செயல், விழாவில் கலந்துகொண்டிருந்த பொதுமக்களையும் பார்வையாளர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, திறப்பு விழா கல்வெட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், புதிய பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் வரைபடங்களை அருகில் இருந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் அருணா, அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடன் இருந்தனர்.