“ஓம் காளி… பத்ர காளி”….பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்திய உதயநிதி மீது வழக்குப்பதிவு! – Kumudam

Spread the love

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(அக்-3) பிரசாரம் மேற்கொண்டார்.

நொச்சிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, ஆளும் தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக விலைக்கு வாங்குவதாகவும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினரை முதலமைச்சர் விஜய் ‘பெட்டி கொடுத்து வாங்கிவிட்டார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், கட்சித் தலைவர்களுக்கு சோஃபாவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெட்டியும் கொடுத்து வாங்கிவிடுகிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது ஆளுங்கட்சியினர் பாடல் பாடுவதாகக் கூறிய அவர், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்னும் டான்ஸும் ஃபைட்டும் மட்டுமே செய்யவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், பிரசாரத்தின்போது சிறுவன் ஒருவரை வேனில் ஏற்றி பேச வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த சிறுவன் பேசும்போது, ‘ஓம் காளி.. பத்ர காளி…’ என்று குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தார்.  

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதுடன், முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *