Tamilnadu
oi-Vishnupriya R
தாராபுரம்: தாராபுரம் சட்டசபை தொகுதியில் சிறுவனை வைத்து முதல்வரை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட்- மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடையும் நிலையில் எல்லா கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
பெரியார் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்ட போது சிறுவனை வைத்து அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது முதல்வரை அவமதிக்கும் வகையில் சிறுவனை உதயநிதி பேச வைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக உதயநிதி மீது தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி மீது குழந்தையை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய நிலையில் இந்த வழக்குப் பதிவு தாராபுரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது தவெக தலைவர் விஜய், குழந்தைகளிடம், “விஜய் மாமாவுக்கு ஓட்டு போட வேண்டும் என உங்கள் தாய், தந்தையிடம் அடம் பிடியுங்கள்” என்றார்.
அதே போல் குழந்தைகளும் தங்கள் தாய் தந்தையரிடம் அடம் பிடித்து உண்ண மறுத்தது போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகின. இது குறித்து குழந்தைகள் நல ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என சொல்லப்பட்டது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தேர்தலில் குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு, ஒருவரது வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான சட்டபூர்வமான காரணம் ஆகாது என விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
குழந்தைகள் மீது காட்டிய அன்பையும், வாய்மொழியாக கூறிய கருத்துகளையும் தவறாக சித்தரித்து அரசியல் நோக்கத்துடன் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக தவெக தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
