ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்.. சிறுவன் கழுத்து அறுத்துக் கொலை! – Kumudam

Spread the love

ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்.. சிறுவன் கழுத்து அறுத்துக் கொலை!

என்கிற தலைப்பில் கடந்த 16.06.2026 தேதியிட்ட இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்பிறகு நடந்த தொடர் போலீஸ் விசாரணையில், ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களிடம் தொடர்ந்து ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறது எனும் பகீர் தகவல் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் அஷ்வின். இவர் கடந்த ஜூன் 4ம் தேதி, கீழக்காவனிப்பட்டி கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அஷ்வினின் சக நண்பர்களான அரவிந்தும் கணேசனும் அஷ்வினை ஓரினச்சேர்க்கைக்கு துன்புறுத்தியதுடன் அதை மற்றவர்களிடம் அஷ்வின் சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், போலீஸாரின் தொடர் விசாரணையில், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி பெற்றோர்களின் நிம்மதியை குலைத்திருக்கிறது.

இதுபற்றி தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “மாணவர்கள், சிறுவர்கள் இப்படி ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு அடிமையாவதற்கான பின்புலத்தை தேடினோம். அப்போது, இப்பகுதியில் மேலும் -சில பள்ளி மாணவர்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது தெரியவந்தது. காரையூர் கிராமத்தில் 15 17 வயது சிறுவர்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று சுற்றி வந்தது தெரியவந்தது.

அந்த கும்பல், மாணவர்களுடன் இனிமையாக பேசிப் பழகுவதும், பின்னர் காடு, கண்மாய் போன்ற பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று முதலில் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து உபசரிப்பதும், நாளடைவில் மது அருந்தப் பழக்கி, அவர்கள் போதையிலிருக்கும்போது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதுமாக இருந்திருக்கிறார்கள். இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இவர்களுடன் தொடர்ந்து பழகிவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அதே காரையூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் (55), அழகுராஜா (19) மற்றும் இலங்கை தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த அசோக்குமார் (60) ஆகிய மூவரை கைது செய்திருக்கிறோம். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளி மாணவர்களிடம்,இவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

கிராமப்புற விவசாயிகள் கூலி வேலைக்கு சென்று விடுவதால் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் பிள்ளைகள் தனிமையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் பொழுதுபோக்க, கண்மாய் கரை போன்ற இடங்களுக்கு செல்லும்போது அவர்களை பின்தொடர்ந்து செல்லும் இதுபோன்ற காமக் கொடூரர்கள் சீரழிக்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் புதிய நண்பர்களிடம் தொடர்புகொள்வது, பள்ளிக்கு சென்று வருவது போன்ற செயல்பாடுகளை கண்காணிக்கவும் அறிவுறுத்திவருகிறோம். பள்ளிகளில் ஆசிரியர்களும், பாடம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்தது என்றில்லாமல் மாணவர்களுக்கு தவறான நடத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்கள்.

போதை ஒழியாமல் பாலியல் தொல்லை ஒழியாது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *