தேவை என்றதுமே கடனை ‘டக்’கென வாங்கிவிடக் கூடாது. கடனை வாங்குவதற்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
அப்படி என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை பட்டியலிடுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.
“இந்த வங்கியில் எனக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு வங்கியில் கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்கிவிடக் கூடாது.
கடன் வாங்குவதற்கு முன்பு, இரண்டு – மூன்று வங்கிகளில் படி ஏறி, இறங்குவது தவறில்லை. அப்போது தான் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி… எதில் குறைவான வட்டி என்பது தெரியும்.

வட்டி விகிதத்தைப் பார்த்து கடன் வாங்குவது நல்லது. ஓரிரு நாள்களுக்கு வங்கிக்கு அலைவதைப் பெரிதாக கருதினால், அடுத்த 4 – 5 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிக வட்டியைக் கூட கட்ட நேரிடலாம்.
மாதா மாதம் சரியாக கட்டக் கூடிய தொகையை இ.எம்.ஐயாக தேர்ந்தெடுங்கள். முடிந்தளவுக்கு கடன் காலத்தைக் குறைந்த ஆண்டுகளையே தேர்ந்தெடுங்கள்.
பிராசஸிங் ஃபீஸ், லேட் பேமெண்ட் ஃபீஸ், அபராதம் போன்றவற்றை முன்பே நன்றாக விசாரித்துக்கொள்ளுங்கள்.
அடமானக் கடன் வாங்குகிறீர்கள் என்றால், உங்களுடைய சொத்து ஜப்தி ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
எவற்றிற்கெல்லாம் கடன் வாங்கவே கூடாது?
ஷாப்பிங், ஆடம்பர செலவுகள்,
விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள்,
ஆடம்பர கொண்டாட்டங்கள்,
லைஃப்ஸ்டைல் அப்கிரேட்கள்.
இவற்றிற்கு ஏன் கடன் வாங்கக் கூடாது என்று சொல்கிறோம் என்றால், இந்தச் செலவுகள் எந்த வருமானத்தையும் தராது. ஆனால், நீண்ட கால இ.எம்.ஐ மட்டும் பரிசாக வழங்கும்.
கடன் வாங்குவதில் செய்யக் கூடாத மிக முக்கிய தவறு…
ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்குவது ஆகும். இது மீண்டும் மீண்டும் கடனிலேயே தான் உங்களை தள்ளுமே தவிர, கடனில் இருந்து மீள வழி செய்யாது.

கடனை முன்னரே அடைக்கலாமா?
கடனை சீக்கிரமே அடைப்பது ஒரு விதத்தில் நல்லது தான்.
இதன் மூலம், முதலில், சீக்கிரம் கடனில் இருந்து மீளலாம். நிதி சுமை குறையும். தேவையில்லாத மன அழுத்தம் இருக்காது.
முன்னரே கடனைக் கட்டுவதற்கு அபராதம் ஏதேனும் இருக்கிறதா என்பதை பாருங்கள். அப்படி இருந்தால், அபராதம் சமாளிக்கக் கூடியதா என்பதை பாருங்கள்.
‘ஓகே’ என்று கடனை முழுமையாக அடைத்துவிடுங்கள்.
இல்லையென்றால், கிடைத்த தொகையை முதலீடு செய்யுங்கள்.
கடன் விஷயத்தில் கடன் வாங்குவது முதல் அதை அடைப்பது வரை பக்காவாக பிளான் போட்டு செய்தால், நமக்கு ஏற்றம் தான். இல்லையேல், அது வலை.
மொத்தத்தில், கடன் நல்லதா… கெட்டதா என்பது, அதை நாம் கையாள்வதைப் பொறுத்தே அமையும்.