கடலூர் மாவட்டம், சிதம்பரம் மீதிக்குடியைச் சேர்ந்த காமாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயங்கொண்டம் பகுதியில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார் காமாட்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் மீதிக்குடியில் இருக்கும் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்த காமாட்சி, நேற்று காலையில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 64 வயது முதியவர், காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில் இருவருக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் கொண்டு வந்திருந்த இரும்புக் குழாயால் காமாட்சியின் தலையில் பலமாக அடித்தார் மகேந்திரன். தொடர்ச்சியாக அடித்ததால் வலியால் அலறித் துடித்த காமாட்சி, ரத்தம் வழிய மயங்கி விழுந்து அப்படியே அடங்கிப் போனார்.
அவரது அலறலைக் கேட்டு ஓடிவந்த காமாட்சியின் தந்தை பாண்டுரங்கன், மகேந்திரனைத் தடுத்தார். ஆனால் அவரையும் மகேந்திரன் இரும்புக் குழாயால் தாக்கினார்.
அதில் பாண்டுரங்கனும் படுகாயங்களுடன் சுருண்டு விழுந்தார். அதையடுத்து முதியவர் மகேந்திரன் அங்கிருந்து தப்பிவிட, அக்கம் பக்கத்தினர் காமாட்சியையும், பாண்டுரங்கனையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு காமாட்சி ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், பாண்டுரங்கனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாமலை நகர் காவல் நிலைய போலீஸார், தலைமறைவாக இருந்த முதியவர் மகேந்திரனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.ஜெயக்குமார், “கொலை செய்யப்பட்ட காமாட்சி, கடந்த ஓர் ஆண்டாக கணவரை பிரிந்து குழந்தையுடன் ஜெயங்கொண்டம் பகுதியில் வாழ்ந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முதியவர் மகேந்திரன், காமாட்சியின் பெற்றோருக்கு அவ்வப்போது கடன் கொடுத்து உதவியிருக்கிறார்.

அந்தச் சூழலில்தான் கணவரை பிரிந்து வாழும் காமாட்சி மீது மகேந்திரனுக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதை காமாட்சியிடமே நேரடியாகக் கேட்டும் இருக்கிறார். அதேபோல காமாட்சிக்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக ஊருக்குள் பரப்பிவிட்டிருக்கிறார்.
அதில் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனுக்கு பாடம் கற்பிக்க நினைத்திருக்கிறார். அதன்படி மகேந்திரனை அவரது செல்போனில் தொடர்புகொண்டு, காட்டுமன்னார்கோயிலுக்கு வருமாறு கூறியிருக்கிறார்.
அப்படி வந்த மகேந்திரனை கடுமையாக திட்டியதுடன், `எனக்கும் காமாட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை’ என அவரை பேச வைத்து வீடியோ எடுத்தார். அத்துடன் மகேந்திரனை செருப்பால் அடித்து வீடியோ எடுத்து, அதை ஊர் மக்களில் சிலருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கோபத்தில்தான் காமாட்சியை அடித்தே கொலை செய்திருக்கிறார் மகேந்திரன்” என்றார்.
“சம்பவம் நடைபெற்றபோது, `என்னை செருப்பால் அடிச்ச வீடியோவை ஏன் எல்லாருக்கும் அனுப்பி வச்ச?’ என்று கேட்டிருக்கிறார் மகேந்திரன். அதற்கு, `நீ மட்டும் என்னை பத்தி ஏன் ஊரெல்லாம் போய் பொய் சொன்ன? கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா?’ என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார் காமாட்சி. இந்த வாக்குவாதம்தான் கொலையில் முடிந்திருக்கிறது” என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.