அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்” (Smithsonian’s National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்’ (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்.
2013 டிசம்பரில், விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலக்கி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்திற்கு மிக முக்கியமான பணி நடைபெற்றது. அந்தச் சவாலான நாளில், நந்தினி அவர்கள் சிவப்பு, நீல நிறம் கலந்த பட்டுப்புடவையை அணிந்திருந்தார். செப்டம்பர் 24, 2014 அன்று மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்து சரித்திரம் படைத்தது.
மங்கள்யான் வெற்றி பெற்ற போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பாரம்பர்யப் புடவை அணிந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகள் (நந்தினி ஹரிநாத், ரிது கரிதால், அனுராதா டி.கே போன்றோர்) ஆரத்தழுவித் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடிய புகைப்படம் உலகெங்கும் வைரலானது.