கடல் நீர் புகுந்த 12 ஆண்டுகள் கழித்து.. சதுப்பு நிலத்தில் கூட்டமாகக் கூடு கட்டிய புதுத் தேனீ | 12 Years After Seawater Flooded the Land, Rare Bees Nest in Swarms on the Marsh

Spread the love

International

oi-Hema Vandhana

லண்டன்: 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண விவசாய நிலமாக இருந்த ஒரு பகுதி, இன்று அரிய உயிரினங்களின் புகலிடமாக மாறியிருக்கிறது. இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் உள்ள ஸ்டியர்ட் மார்ஷஸ் சதுப்பு நிலத்தில், வரிக்குதிரையைப் போல கருப்பு-வெள்ளை கோடுகளுடன் விரல் நக அளவுள்ள புதுத் தேனீக்கள் முதல்முறையாகக் கூட்டமாகத் தென்பட்டுள்ளன. இந்த மாற்றம் எப்படி நடந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் உள்ள ஸ்டியர்ட் மார்ஷஸ் என்ற இடத்தில் ஒரு புதுமையான தேனீ தென்பட்டுள்ளது. பார்க்க ஒரு விரல் நக அளவே இருக்கும் இந்தத் தேனீயின் உடலில் கருப்பு, வெள்ளை கோடுகள் ஓடுகின்றன.

Sea Aster Mining Bee WWT Steart Marshes Somerset Wildlife

சீ ஆஸ்டர் மைனிங் பீ (Sea Aster Mining Bee) என அழைக்கப்படும் இதை, அப்பகுதியில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் நைஜல் பிலிப்ஸ் கண்டறிந்துள்ளார். சதுப்பு நிலங்களைக் காக்கும் WWT அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும் இவர், அடிக்கடி அங்கு செல்வது வழக்கம்… இந்த முறை மணல் பாங்கான வறண்ட பகுதியில் ஏராளமான தேனீக்கள் கூட்டமாகக் கூடு கட்டி இருப்பதைக் கண்டு வியப்படைந்துள்ளார்.

கருப்பு வெள்ளை கோடுகளுடன்..

இதற்கு முன்பு இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே இந்த வகைத் தேனீக்கள் காணப்பட்டன. சோமர்செட் பகுதியில் இவை இருப்பது இதுவே முதல் முறை என்பதால், இயற்கை ஆர்வலர்கள் பயங்கர உற்சாகமடைந்துள்ளனர்…

இந்த தேனீக்கள் எல்லா பூக்களிடமும் செல்வதில்லையாம்.. கடலோர உப்பு சதுப்பு நிலங்களில் வளரும் சீ ஆஸ்டர் செடியின் இளஞ்சிவப்பு, மஞ்சள் பூக்களை மட்டுமே உணவுக்காக நாடுகின்றன. மற்ற பூக்கள் கோடையில் உதிர்ந்துவிடும்.. ஆனால் இந்தப் பூக்கள் இலையுதிர் காலத்திலும் பூத்துக் குலுங்குவதால், தேனீக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்கிறது.

சுவாரஸ்ய வரலாறு

இந்த தேனீக்களும் பூக்களும் இங்கு எப்படி வந்தன என்பதற்குப் பின்னால் ஒரு சுவையான வரலாறு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இடம் விவசாய நிலமாக இருந்ததாம்.. அடிக்கடி வெள்ளம் வரும் அபாயமும் இருந்திருக்கிறது.. அதனால் இந்த இடத்தை மறுபடியும் இயற்கையான கடலோர சதுப்பு நிலமாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள்..

WWT அமைப்பும் சுற்றுச்சூழல் அமைப்பும் சேர்ந்து, கடல் நீர் உள்ளே வருவதற்கான வழியை 2014-ல் உருவாக்கின. இதனால் நிலம் உப்புச் சதுப்பு நிலமாக மாறி, தேனீக்கள் விரும்பும் பூக்களும் செழித்து வளர்ந்தன.

அரியவகை தேனீ

இங்கிலாந்தின் உப்புச் சதுப்பு நிலங்களில் வாழும் 290 வகை எலும்பில்லாத சிறிய உயிரினங்களில், 148 வகைகள் இங்குதான் வசிக்கின்றன. தேனீக்கள் மட்டுமல்லாமல் பல பறவைகள், வவ்வால்கள், விலங்குகள் மற்றும் அரிய தாவரங்களும் இந்த இடத்தில் உள்ளன. இன்றும் இங்கு மாடுகள் மேய்க்கப்படுகின்றன; அவற்றின் இறைச்சி சால்ட்மார்ஷ் பீஃப் என்ற பெயரில் விற்கப்படுகிறது. சாம்ஃபயர் என்ற கடல் தாவரத்தையும் அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர்.

அதாவது, விவசாய நிலத்தை இயற்கைக்கு திருப்பி கொடுத்ததால், 12 ஆண்டுகளுக்கு பிறகு அரிய உயிரினங்கள் திரும்ப வந்துள்ளன. இயற்கைக்கு இடம் தந்தால், அழிந்து வரும் உயிரினங்களும் வாழும் என்பதற்கு இது சிறந்த சாட்சி…!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *