திமுக ஆதரவு பாஜக அரசுக்கு உதவியதே: ரவிக்குமார் விளக்கம் | MP Ravikumar speaks on Delimitation problems

Spread the love

கட்டற்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அஸ்ஸாமிலும் ஜம்மு காஷ்மீரிலும் பாஜகவுக்கு ஆதரவான முறையில் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்பு ஆணையம் மாற்றியமைத்தது.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் 7 புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன — இதில் 6 தொகுதிகள் ஜம்முவிற்கும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. தங்களுக்குச் சாதகமாக எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு வெளிப்படையான சூழ்ச்சி (gerrymandering) என்று எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்தன.

2023 ஆம் ஆண்டு அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பும் அப்படித்தான். 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் துப்ரி (Dhubri) பார்பேட்டா (Barpeta) முதலான தொகுதிகள் தாறுமாறாகப் பிரிக்கப்பட்டன; அதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கிகளும் சிதறடிக்கப்பட்டன. அதேபோல இந்தியா முழுவதும் தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டால் இந்தியாவை அதன் பின்னர் பாஜகவின் பிடியிலிருந்து ஒருபோதும் மீட்க முடியாது.

தொகுதி மறுசீரமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு தாம் கனவுகண்ட பெரும்பான்மைவாத அரசை சட்டப்பூர்வமாக அமைப்பதற்கு பாஜக திட்டமிடுகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை சமயச் சார்பற்ற, சமூகநீதிக் கட்சிகளுக்கு உள்ளது.

ஸ்டாலின் - திமுக

ஸ்டாலின் – திமுக

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக உண்மையிலேயே அக்கறையோடு இருக்குமானால் அது தனது ஆட்சியின்போது அமைத்த குரியன் ஜோசப் கமிஷனின் பின்வரும் பரிந்துரைகளை வலியுறுத்த வேண்டும்:

“ தொகுதி மறுவரையறை ஆணையங்கள் நாடாளுமன்ற, மாநிலச் சட்டமன்றங்களின் குறித்த காலத்திற்குள்ளான ஆய்விற்குப் பிறகே நடைமுறைக்கு வர வேண்டும் என்றும், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அரசமைப்புச் சட்ட, அதிகார வரம்பு குறித்த காரணங்களுக்காக நீதித்துறையின் சீராய்வை அனுமதிக்க வேண்டும் என்றும் அரசமைப்பின் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 82, 170, 329(a) ஆகியவற்றைத் திருத்த வேண்டும்.

அதே வேளையில், தேர்தல் செயல்முறை தொடங்கிய பிறகு, நீதிமன்றத் தலையீட்டிற்கான தடை தொடர வேண்டும். இத்தகைய திருத்தங்கள் செய்யப்படும் வரை, நாடாளுமன்றம் இயற்றும் எந்தவொரு தொகுதி மறுவரையறைச் சட்டமும் கட்டாயமான சட்டமன்ற ஆய்விற்கு வழிவகை செய்ய வேண்டும்.”

“ ஒன்றிய, மாநிலத் தொகுதி மறுவரையறை ஆணையங்களைத் தனித்தனியாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்த அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 82, 170, 327, ஏழாவது அட்டவணையின் ஒன்றியப் பட்டியலின் 72வது இனம், மாநிலப் பட்டியலின் 37வது இனம் ஆகியவற்றைத் திருத்த வேண்டும். மக்களவையின் தொகுதி மறுவரையறை ஆணைய அதிகாரத்தை ஒன்றிய ஆணையத்திடமும், மாநிலச் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை ஆணைய அதிகாரத்தைத் தனியான மாநில ஆணையங்களிடமும் வழங்க வேண்டும். இந்த ஆணையங்கள் பல கட்சிப் பிரதிநிதித்துவம், தேர்தல் குழு அடிப்படையிலான நியமனங்களைக் கொண்டிருப்பதை அரசமைப்புச் சட்ட அளவில் உறுதி செய்ய வேண்டும்.”

என நீதிபதி குரியன் ஜோசப் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இவற்றைத் திமுக வலியுறுத்துமா?

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தாமல் மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவளித்தால் அது பாஜகவின் பெரும்பான்மைவாத அரசை நிரந்தரமாக அமைப்பதற்கான திட்டத்துக்கு உதவி செய்வதாகவே பொருள்படும் . ‘காங்கிரஸ் எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டது எனவேதான் இந்த முடிவை எடுக்கிறோம்’ என திமுக இதை நியாயப்படுத்துவது சரியல்ல. இந்த மசோதாவை ஆதரிப்பது இதுவரை திமுக முன்வைத்துவந்த மாநில சுயாட்சி அரசியலை அதுவே குழிதோண்டிப் புதைப்பது தவிர வேறல்ல.” என விளக்கியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *