“கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்”- திருமாவளவன் | TN Govt should withdraw the decision to outsource enumeration work to private parties –Thirumavalavan

Spread the love

மின் கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் வழங்கலில் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையே நிலவுகிறது. இதனால் அரசின் மீது களங்கத்தைக் கற்பிக்கும் சூழல் எழுகிறது. மின் தேவை அதிகரிப்பு, மின்நுகர்வோருக்கு சீராக மின்சாரம் வழங்க இயலாமை, மின் கணக்கீட்டில் தாமதம், கட்டணக் கணக்கீட்டில் குளறுபடி, மின் கட்டண உயர்வு போன்ற புகார்களும் நிகழ்காலத்தில் அதிகரித்துள்ளன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள பணியாளர் பிரச்சினைகள்தான் இத்தகைய நெருக்கடிநிலை ஏற்பட முக்கியக் காரணமாகும். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பீடர் டிரிப் (Feeder Trip) ஆகி, துணைமின் நிலையங்களில் ஆப்ரேட்டர்கள் (Operators) இல்லையென்பதால் மின் தடை ஏற்படுகிற இருள்நிலை உருவாகிறது. மின் நுகர்வோருக்கு கட்டணக் கணக்கீடு தவறுகளால் கணக்கீடு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற புகார்கள் பெருமளவு எழுகிறது. மின் கணக்கீட்டைச் செய்திட கட்டணக் கணக்கீட்டாளர் (Assessor) பற்றாக்குறையே இதற்குக் காரணம்.

மின்வாரியம்

மின்வாரியம்

த.வெ.க அரசு பொறுப்பேற்றதும் வெளியிடப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கையின்படி, 53,575 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவற்றில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் மிகப் பெரும்பான்மையாக கணக்கீட்டாளர் பணியும் சேர்த்து செய்யக்கூடிய பல்நோக்கு கள உதவியாளர்கள் (Multi-Purpose Field Assistant) – 12,500 பேரும், அதற்கடுத்து மின் தொழில்நுட்ப உதவியாளர்கள் 945 பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்கள் பணியமர்த்துவதற்கு மாறாக, கணக்கீட்டுப் பணியினைச் செய்யும் பொறுப்பு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில்; அதுவும் வரையறுக்கப்பட்ட சிலர் மட்டுமே பங்குபெறக்கூடிய லிமிடெட் டெண்டர் முறையில், மின் கோட்ட அளவில் செயற்பொறியாளர்களே ஒப்பந்த அழைப்பு விடுத்து அக்டோபர் முதல் 6 மாத காலத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை போன்ற சார் நிறுவனங்களை் முழுமையாக தனியார்மயமாக்கும் நிர்வாக முயற்சியாகவே அமையும். எனவே, கணக்கீட்டுப் பணியினை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *