சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும், எனவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கருவைக் கலைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

அப்பெண்ணின் கணவர் குடும்ப வாட்ஸ்அப் குழுவில் அந்தப் பெண்ணின் குணநலன்கள் குறித்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது.
அப்பெண்ணின் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முதல் கட்டமாகச் சமரசத்திற்கான முதல் படியாக, மனைவி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகப் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு அப்பெண்ணின் கணவரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். குழந்தையின் நலனுக்காக தம்பதியினரைத் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தாக்குதல் நிகழ்ந்தாலோ, அல்லது கருவில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும், ஆனால், தற்போதைய வழக்கு முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்டுள்ளது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.