கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு! – Kumudam

Spread the love

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுக்க உள்ளதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து, இன்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை தீவிர புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் பல இடங்களிலும் மழைப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாகத் திண்டுக்கல் மாவட்டத்தின் மலைப்பகுதியான கொடைக்கானல் மலைச் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *