அதிர்ச்சி கொடுத்த 2026 தேர்தல்!
2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுகவை மட்டுமல்ல, தமிழ்நாடு அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தன. ஆளுங்கட்சியாக இருந்த திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றது. பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களும் தோல்வியை சந்தித்தனர். இதையடுத்து, தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய திமுக தலைமை பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தியது. கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை கருத்துகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு குறித்தே அதிக புகார்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. சில மாவட்டங்களில் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் கட்சி செயல்படுவதாகவும், மற்ற நிர்வாகிகளுக்கு போதிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
77-ல் இருந்து 110… ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
இதையடுத்து, மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க திமுக தலைமை முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக, 77 மாவட்டச் செயலாளர்கள் என்ற எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் பெரிய மாவட்டங்களை சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரித்து, கட்சிப் பணிகளை நேரடியாக கண்காணிக்க முடியும் என திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. ஆனால், புதியதாக உருவாகும் மாவட்டச் செயலாளர் பதவிகளை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பதுதான் தற்போது திமுகவுக்குள் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
உதயநிதி தரப்பு போட்ட கணக்கு!
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் கணிசமான எண்ணிக்கையிலான இடங்களை இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது 110 இடங்களில் கிட்டத்தட்ட 50 இடங்களை இளைஞரணியினருக்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். கட்சியின் அடுத்த தலைமுறை நிர்வாகிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அந்தத் தரப்பின் எதிர்பார்ப்பாக இருந்ததாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கனிமொழி போட்ட ‘ட்விஸ்ட்’!
இதற்கு மாறாக, மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு நேரடி நியமனத்தை விட உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கனிமொழி தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் ஜனநாயக முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அந்தத் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இறுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவுதான் தற்போது உள்கட்சி அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
ஸ்டாலின் முடிவு யாருக்கு சாதகம்?
மாவட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின், உட்கட்சி தேர்தல் மூலமாகவே மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். அதாவது, புதிய மாவட்டச் செயலாளர் பதவிகளை குறிப்பிட்ட தரப்பினருக்கு நேரடியாக வழங்குவதற்குப் பதிலாக, தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யும் முறைக்கு ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்துள்ளார்.
இதன் மூலம், இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு நேரடியாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உதயநிதி தரப்பின் டிமாண்டிற்கு முட்டுக்கட்டைப் போடப்பட்டுள்ளதோடு, உட்கட்சி தேர்தல் வேண்டும் என்ற கனிமொழி தரப்பின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுகவில் அடுத்த ‘கேம்’ ஆரம்பம்!
மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும் பட்சத்தில், தற்போது பதவியில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் என பலரும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதனால், 110 மாவட்டச் செயலாளர் பதவிகளை சுற்றி திமுகவுக்குள் புதிய அரசியல் போட்டி உருவாகியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் கட்டமைக்க ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, நிர்வாக ரீதியாக திமுகவை வலுப்படுத்துமா? அல்லது மாவட்டச் செயலாளர் தேர்தல் புதிய கோஷ்டி மோதல்களுக்கு வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

