கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! சித்தா பட இயக்குநரா? – Kumudam

Spread the love

லோகேஷ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்திற்கு பிறகு வந்த இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்கள் பெரிய அளவில் கமலுக்கு கைக்கொடுக்கவில்லை.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சங்கரின் “இந்தியன் 2”, மணிரத்னத்தின் “தக் லைஃப்” படங்கள் என இரண்டுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை தழுவின.  

இதற்கிடையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த “கல்கி 2898 AD” திரைப்படத்தில் வில்லனாக கமல் தோன்றியது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒருபக்கம் நடித்த படங்கள் சோபிக்கவில்லை என்றாலும், மறுபக்கம் தயாரிப்பில் தீவிரம் காட்டினார் உலகநாயகன் கமல்ஹாசன். 

என்னத்தான் சினிமாவில் கதைகளை கேட்டு தயாரிப்பதில் தீவிரமாக இருந்தாலும், அரசியலிலும் பிசியாகி தற்போது திமுக கூட்டணியில் ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ளார். 

தயாரிப்பில் கவனம், எம்.பி.ஆக செயல்பாடு என டுயல் ரோல் செய்துக் கொண்டிருக்கும் கமல், மீண்டும் படங்களில் நடிக்க உள்ளது சினிமா ரசிகர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அந்தவகையில், பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு இயக்கத்தில் “KH237” படம், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் KH X RK, சிவகார்த்திகேயனை வைத்து ‘சேயோன்’ படம் தயாரிப்பு என பக்கா மாஸான லைன் அப் வைத்துள்ளார். 

அதேபோல் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் கமலுக்கு, விக்ரம் படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீடையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க லோகேஷ் கனகராஜ்தான் வர வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி, தற்போது சித்தா படத்தின் இயக்குநரான SU. அருண்குமார், கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், அந்தப் படத்திற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா மற்றும் வீர தீர சூரன் பாகம் 2 என நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் SU. அருண்குமார். இவர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப் போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கமல்ஹாசன் கருப்பு சட்டை, பச்சை பேன்ட், கையில் அரிவாள் மற்றும் காலில் காக்கி பூட்ஸுடன் போஸ் கொடுக்கிறார். அதை மானிட்டரில் இயக்குநர் அருண்குமார் பார்த்துக் கொண்டிருப்பது போல வெளியாகியுள்ள புகைப்படம், சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் உருவாகும் என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அருண்குமாரின் படங்கள் மண் சார்ந்த ஆக்‌ஷன் மற்றும் சமூக அக்கறை கொண்ட கதைகளாக இருக்கும் நிலையில், கமலின் இந்த கெட்டப் ஜனரஞ்சகமான ஆக்‌ஷன் படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

மேலும், இந்தப் படத்தின் கூட்டணி குறித்தும், கமல்ஹாசனே இப்படத்தை தயாரிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *