இந்த விவகாரம் பற்றி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, ஜூன் 29-ம் தேதியான நேற்றைய தினம், இருதரப்பினரையும் அறிவாலயம் வருமாறு அழைத்தார் ஆர்.எஸ்.பாரதி. மேயர் சுஜாதா மீண்டும் தனது ஆதரவு கவுன்சிலர்களான ஆர்.பி.ஏழுமலை உள்ளிட்டோருடன் அறிவாலயம் சென்றார்.
ஆர்.எஸ்.பாரதியிடம், “துணை மேயர் சுனில்குமார் த.வெ.க செல்கிறார். அதனால்தான் மாநகராட்சியில் இப்படி பிரச்னை செய்கிறார்’’ என்று போட்டுக்கொடுத்திருக்கிறார் கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை.
துணை மேயர் சுனில்குமார், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக வலம் வருவதாலும் ஆர்.பி.ஏழுமலை சொன்னதை ஆர்.எஸ்.பாரதி நம்பவில்லை.
அப்போது, “ஏற்கெனவே ஆளும்கட்சியினர் `பார்ட்டி ஃபண்ட்’ என்று தி.மு.க-வை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், மாநகராட்சி `கமிஷன்’ விவகாரத்தை நீங்களே பேசி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது தொடரக் கூடாது’’ என்று எச்சரித்து, மேயரிடம் `மன்னிப்பு’ கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
இதைத்தொடர்ந்து அங்குவந்த துணை மேயர் சுனில்குமாரிடமும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பியிருக்கிறார். அதே சமயம், “என் தொகுதி விவகாரம் என்பதால், யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்’’ என்றும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், இருதரப்பும் சமரசம் ஆவதுபோலத் தெரியவில்லை. உஷ்ணமாக வேலூருக்குத் திரும்பிய நிலையில், அவரவர் `பர்சனல்’ டைரி பக்கங்களையும் வெளியில் கசியவிடத் தயாராகியிருக்கிறார்களாம்.
இதனால் அனலாய் தகிக்கிறது வேலூர் திமுக.!