கரப்பான் பூச்சி போராட்டம் ரத்து… உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு என்ன? – Kumudam

Spread the love

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய போராட்டங்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது.

36 நாட்கள் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியது. மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

மேலும், டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது மாணவர்கள் மீது காவல்துறை பதிவு செய்த அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்திய டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அதற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவற்றை வாபஸ் பெறாமல் இருந்ததைக் கண்டித்து, செப்டம்பர் 5-ஆம் தேதி மீண்டும் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் அப்ஜித் தீப்கே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 2,873 நபர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும், ஏற்கெனவே வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மனுத்தாக்கல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் வாபஸ்

மத்திய அரசு போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாபெரும் போராட்டப் பேரணியை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *