இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி….

யாருக்கு எதிராக சண்டை செய்கிறோம் என்பதை விட எந்த நோக்கத்திற்காக என்பதுதான் போராட்டத்தின் வீரியத்தை இன்னமும் கூட்டும். கேகேஆருக்கு ஒரு தோல்விகூட எலிமினேஷன் பாதையில் எட்டு வைக்கச் செய்யும் என்றால் ஆர்சிபிக்கு ஒவ்வொரு வெற்றியும் ப்ளே ஆஃப் கனவுகளை வண்ணமயமாக்கும் என்பதுதான் நிலைமை. ஐபிஎல் லீக் போட்டிகளின் இறுதிச் சுற்றில் நடந்து வரும் எல்லாப் போட்டிகளையும் இதுதான் சுவாரசியமானதாக ஆக்குகிறது.
மும்பைக்கெதிரான வெற்றி இப்போட்டிக்கு முன்னதாகக்கூட ஆர்சிபி ரசிகர்களால் நம்ப முடியாததாகவே இருந்தது. அதே ராய்ப்பூரில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அதே களத்தில் மேலும் ஒரு போட்டி என்பதால் ஆர்சிபி, கேகேஆர் இரு தரப்புமே வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிளேயிங் லெவனை இறுதி செய்திருந்தன.
ஹாசில்வுட்டோடு சேர்த்து இன்னொரு ஓவர்சீஸ் வேகப்பந்து வீச்சாளராக ஜேக்கப் டஃபியை ஆர்சிபி கொண்டுவர, கேகேஆரும் சௌரப் துபேவுக்கு வாய்ப்பு அளித்திருந்தது.
ஓப்பனிங் ஸ்பெல்லில் விக்கெட்டுக்கான உத்தரவாதத்தை இந்த சீசன் முழுவதுமே புவ்னேஷ்வர் குமார் கொடுத்துக் கொண்டு தானே இருக்கிறார்? விக்கெட் அறுவடையே செய்ய முடியாத களங்கள்கூட பர்ப்பிள் கேப்பினை அவருக்கு அணிவித்து அழகு பார்க்கின்றன என்பதுதான் நிதர்சனம். இந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆரம்பித்த ஃபின் ஆலனை புவ்னேஷ்வர் குமாரின் அற்புதப் பந்துவீச்சு மூன்றாவது ஓவரிலேயே வெளியேற்றியது. டஃபியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு கைகொடுக்காமல் போன போதிலும் ரஹானேவை ஹாசில்வுட் வெளியேற்றி பிரேக் த்ரூ கொடுத்தார். கேகேஆரும் பணிந்து பின்வாங்கவில்லை, டஃப் ஃபைட் கொடுத்தது. இரு அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த போதிலும், பந்து வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாக இருந்த போதிலும் கூட பவர்பிளேவின் முடிவில் 56 ரன்களை கேகேஆர் சேர்த்து விட்டது.

கேமரூன் க்ரீன் – ரகுவன்சிக்கு இடையிலான பார்ட்னர்ஷிப்தான் மத்திய ஓவர்களை அதிமுக்கியமானதாக்கியது. தாக்குப் பிடித்து விட்டு பின் தாக்குதலைத் தொடுத்திருந்தனர். குறிப்பாக ரகுவன்சியின் பேட் ஸ்கோர் செய்யும் கியரை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி ஃபயர் விடத் தொடங்கியது. 16 பந்துகளில்கூட வெறும் 21 ரன்களை எடுத்திருந்த ரகுவன்சி, அதற்கடுத்த 16 பந்துகளில் அரை சதத்தை எட்டிவிட்டார். விக்கெட் விடாமல் நிதானமான ஆட்டத்தை ஆடிய போதும் ரன்கள் வந்து கொண்டே இருப்பதையும் உறுதி செய்தார்.
கேமரூன் கிரீன் ஆட்டமிழந்த பின் வந்து சேர்ந்த ரிங்கு சிங் வழக்கம் போல `கேமியோ கிங்’ ஆக மாறி 29 ரன்களில் 49 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோர் 200-ஐ நெருங்குவதை உறுதி செய்தார். இருப்பினும் அது 200-ஐ தாண்டாமல் இருப்பதனை ஆர்சிபியின் டெத் பௌலிங் உறுதி செய்தது.
புவ்னேஷ்வர், ஹாசில்வுட், ரஷிக் சலாம் மூவரும் இணைந்து யார்க்கர்களால் போர் தொடுக்க இறுதி நான்கு ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் தொடக்கத்தில் இருந்ததை விட களம் சற்றே பேட்டிங் செய்வதற்கு இலகுவாக இறுதி ஓவர்களில் மாறி இருந்த போதும் ஆர்சிபி பௌலர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு அதிவேக ரன் குவிப்பிற்கு வேகத்தடை விதித்தது. மூன்று விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தது என்பதால் இன்னமும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கேகேஆர் தனது ரன் எடுக்கும் வேகத்தை அதிகரித்திருந்தால் ஆர்சிபிக்கு இன்னமும் ஒரு சவாலான இலக்கை நிர்ணயித்து இருக்கலாம்.
`20 ஓவர் போட்டிகளில் எல்லாமே சாத்தியம்’ என்ற உண்மையை நினைவில் வைக்க தவறி இதுவே போதும் என முடிவுகட்டி விட்டனர்.

எட்ட வேண்டிய இலக்குக்கு தேவையான ரன்ரேட் பத்துக்கும் கீழேதான், களமும் பெரியளவில் சவால் விடவில்லை, சுனில் நரைன் மற்றும் கார்த்திக் தியாகி தவிர யாருடைய பந்துவீச்சும் அச்சுறுத்துவதாக இல்லை – இது எல்லாவற்றையும் தாண்டி சேஸிங்கை சுலபமாக்குவதற்கான ஒரு முக்கிய காரணி ஆர்சிபி வசம் இருக்கிறது. அதுதான் `கோலி’ என்ற புனைப் பெயருடன்(!) வலம் வரும் சேஸிங் மாஸ்டர். கடைசி இரு போட்டிகளில் கோலி டக் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். அதற்காகவே காத்திருந்தது போல் பல வித விமர்சனங்களும் எல்லா திசையில் இருந்தும் கட்டவிழ்க்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்தப் போட்டி கோலிக்குள் இருந்த சேஸ் மாஸ்டரை மீண்டும் வெளிக் கொணர்ந்தது. கேமியோவினாலோ கிரிக்கெட் புத்தகத்தில் இல்லாத ஷாட்களாலோ அரங்கத்தை அதிர வைக்கவில்லை. மாறாக அவருக்கு மிக பழக்கமான சப்போர்டிங் ஆங்கர் ரோலை மீண்டும் ஒருமுறை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
ஜேக்கப் பெத்தேலின் விக்கெட் நான்காவது ஓவரிலேயே விழுந்து அவருக்கும் கோலிக்கும் இடையிலான 37 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. போட்டியின் முதல் ஓவரான தனது கரியரின் முதல் ஓவரை சௌரவ் துபே மிக அற்புதமாக பந்து வீசி இருந்தார். பந்து ஸ்விங் ஆகி பேட்டின் இன்சைட் மற்றும் அவுட் சைட் எட்ஜ்களை நலம் விசாரித்தது. வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து கேகேஆருக்கான கிக் ஸ்டார்டைக் கொடுத்த சௌரவ் துபேவினை தனது இரண்டாவது ஓவர் வீச வந்து போது ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக கவனித்தார். இருப்பினும் அதற்கடுத்த ஓவரிலேயே ஜேக்கப் பெத்தேலை கார்த்திக் தியாகி ஷார்ட் பாலில் வெளியேற்றினார். இந்த பார்ட்னர்ஷிப்புக்கு போடப்பட்ட எண்ட் கார்ட் இன்னமும் ஆபத்தான கோலி – படிக்கல் பார்ட்னர்ஷிப்புக்கு வழிவிட்டது.

Inch Wide, Mile Deep’ என்பது ஒரு காயத்தின் தீவிரத்தை அது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை குறிப்பிட பயன்படும் சொற்றொடர். கோலியின் நீண்ட இன்னிங்க்ஸ்கள் எதிரணிக்கு ஏற்படுத்தும் வலியும் அத்தகையதுதான். சேஸிங்கில் கோலி பவர்பிளேவைத் தாண்டி நின்றால் அவரது அணியின் வெற்றி 50 சதவிகிதமும், பத்து ஓவர்களைத் தாண்டினால் 99 சதவிகிதமும் உறுதியாகும் என்பது அவரால் எழுதப்பட்ட விதி. இந்தப் போட்டியும் அந்த விதிக்கு விலக்கல்ல. எந்த பந்தை அடிக்க வேண்டும் எதை சாய்ஸில் விடவேண்டும் என்பதை சர்வ ஜாக்கிரதையாக அணுகி இருந்தார்.
கோலியால் அடிக்கப்பட்ட பவுண்டரிகளில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவே வந்திருந்தது. அதேபோல் ஆஃப் சைடில் அவரது ஸ்கோரிங் ஆப்சன்கள் தாழ் போடப்பட பெரும்பாலான ரன்களை லெக் சைடிலேயே அடித்திருந்தார். 32 பந்துகளில் அரைசதத்தை எடுத்திருந்த கோலி 58 பந்துகளிலேயே சதத்தை தொட்டிருந்தார். கோலி தனக்கான ரிதத்தில் செட் ஆகும் போது, அவரது டைமிங்கும் ஃபுட் வொர்க்கும் பிசகேயின்றி பயணிக்கும். இந்த சதம் அதற்கான இன்னொரு சான்று.

`
இரு போட்டிகளிலும் பேக் டு பேக் டக் அவுட் ஆகி இருந்ததால் இப்போட்டியில் ஒரு ரன் எடுத்த உடனே தன்னையும் அறியாமல் கோலி அதனைக் கொண்டாடியது ரசிக்கும்படியாக இருந்தது. அதேசமயம் சதத்தை அடித்த போது பெரியளவில் அதனைக் கொண்டாடாத பக்குவமும், இலக்கின் மீதான கவனமும்கூட அவரை நாம் கொண்டாடும்படியாக இருந்தது. படிக்கல்லின் பங்களிப்பை மட்டும் கழித்துப் பார்த்தால் இது `ஒன் மேன் ஷோ’ என்பதே உண்மை. போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் ரஹானே பிட்ச் புது பேட்ஸ்மேன்களுக்கு சவாலானது என்று கூறி இருந்தார். உண்மைதான், கோலி நிலைத்து நிற்காமல் போய் இருந்தால் ஆர்சிபிக்கு வெற்றி எட்ட முடியாததாகக்கூட மாறியிருக்கும். கோலி 21 ரன்கள் இருந்தபோது விடப்பட்ட அந்த கேட்ச் போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது.
16 புள்ளிகளைப் பெற்றும் ஆர்சிபி இன்னமும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை, 9 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தும் கேகேஆருக்கான வாயில் இன்னமும் அடைக்கப்படவில்லை……