கருப்பு: “எங்களின் ரத்தமும் வியர்வையும் கலந்த படம்" – தயாரிப்பு நிறுவனத்தின் நெகிழ்ச்சிப் பதிவு!

Spread the love

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட ‘கருப்பு’ திரைப்படம், படப்பிடிப்பு முடிந்தும் டிஜிட்டல் உரிமம் மற்றும் வணிகம் தொடர்பான காரணங்களால் வெளியாவதில் தாமதமானது. கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி – சூர்யா

சூர்யாவின் பிறந்தநாள் டீசர் மற்றும் தீபாவளிக்கு வெளியான ‘காட் மோட்’ பாடலுக்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டு, கடந்த மார்ச் மாதமே அடுத்த அப்டேட்கள் வெளியாகின. படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், போஸ்டர்களில் இருந்து தேதி நீக்கப்பட்டது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. சென்சார் பணிகளுக்காகவே இந்த மாற்றம் என்றும், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கமளித்தார். மதுரையில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில், தேர்தல் மற்றும் அரசியல் சூழல் காரணமாக டிரெய்லர் வெளியீடு தள்ளிப்போனது. புதிய அரசு பதவியேற்ற பின்னரே டிரெய்லர் வெளியாகி ரிலீஸ் பணிகள் வேகம் எடுத்தன.

முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில், மே 14-ம் தேதி ரிலீஸின் போது கடைசி நேரத்தில் நிதி மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் எழுந்தன. இதனால் தமிழகத்தில் நேற்றைய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், வடமாநிலங்களில் தொழில்நுட்பத் கோளாறால் படம் வெளியானதால் சில காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

கடந்த 32 மாதங்களாகப் பல தடைகளைத் தாண்டி இப்படத்தைக் கொண்டு வரப் படக்குழு போராடி வந்தது. ரிலீஸ் சிக்கல்களால் நேற்று மதியம் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்கலங்கியபடி ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரினார். இருப்பினும், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினரின் இடைவிடாத முயற்சியால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ‘கருப்பு’ திரைப்படம் வெற்றிகரமாகத் திரைக்கு வந்துள்ளது.

சூர்யா - கருப்பு திரைப்படம்
சூர்யா – கருப்பு திரைப்படம்

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை தயாரித்த Dream Warrior Pictures தன் எக்ஸ் பக்கத்தில், ``சில பயணங்கள் காலத்தை மட்டுமல்ல, ஒருவரது மன உறுதியையும் சோதிக்கின்றன. கருப்பு திரைப்படத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கும், படம் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வந்தவர்களுக்கும், மௌனத்திற்கும் தாமதத்திற்கும் இடையிலும் எம்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் ஒரு மன்னிப்பையும், அதற்கும் மேலாக எங்கள் ஆழமான நன்றியையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தக் காத்திருப்பு வேதனையானது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்தத் திரைப்படத்தின் மீது பெரும் அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்திருந்தீர்கள். ஒவ்வொரு தாமதமும் எங்களையும் பெரிதும் பாதித்தது. ஆனால், ஒவ்வொரு பின்னடைவின் போதும், உங்களின் ஆதரவும், செய்திகளும், நம்பிக்கையும், எல்லையற்ற அன்பும்தான் இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன.

இன்று, நிறைந்த மனதோடும் நெகிழ்ச்சியோடும் நாங்கள் அறிவிக்கிறோம்: #கருப்பு உலகம் முழுவதும் வெளியாகிறது! இந்தத் திரைப்படம் எங்கள் ரத்தம், வியர்வை, தூக்கமில்லா இரவுகள், போராட்டங்கள் மற்றும் உணர்வுகளைச் சுமந்து நிற்கிறது. இது இனி எங்கள் கதை மட்டுமல்ல, இந்தப் பயணத்தில் எங்களுடன் நின்ற உங்கள் ஒவ்வொருவருக்குமான கதை. காத்திருந்தமைக்கும், எங்களை நம்பியமைக்கும் மிக்க நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *