கரூர்: சின்ன ஆண்டாங்கோவில் அருகில் குப்பை மேடு; சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டுகொள்ளாத நகராட்சி | Karur: Garbage dump near Chinna Andankovil; Municipality ignores the resulting health hazard

Spread the love

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் ஏரியாவின் பிரதான பகுதியான விநாயகர் கோயிலின் எதிரிலேயே, மக்கள் குப்பைகளைக் கொட்டி வருவதால் அங்கு பெரும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது.

சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அவர்களின் வீட்டில் சேரும் காகித கழிவுகள், நெகிழி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை கோயிலின் எதிரிலேயே தினமும் வந்து கொட்டுகின்றனர்.

இதனால் அந்த வழியில் சென்றாலே அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விநாயகரை வழிபடவும், மன நிம்மதிக்காகவும் கோயிலுக்கு வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் குப்பை வண்டி !

இது குறித்து அங்கு வசிப்பவர்களிடம் விசாரித்தோம், “குப்பை வண்டி சரியாக வருவதில்லை, வாரத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே வந்து குப்பைகளைப் பெற்றுக்கொண்டு செல்கின்றனர்” எனக் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், மொத்த பகுதிக்கே சேர்ந்து ஒரு பெரிய குப்பைத்தொட்டி மட்டுமே உள்ளதால் அதுவும் நிரம்பி வழிகின்றது. அதனை அகற்றவும் நகராட்சியில் இருந்து யாரும் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.

குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைக் கிடங்காக மாறிய சாலை

சின்ன ஆண்டாங்கோவில் உட்பகுதிக்குச் செல்லும் சாலையிலும் ஆங்காங்கே குப்பைக் குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் மொத்த பகுதியிலும் சுற்றுச்சூழல் மாசு உண்டாகியுள்ளது.

ஒன்று மட்டும் இல்லாமல், சாலையில் ஆங்காங்கே, குப்பைத் தொட்டிகள் வைத்தால் குப்பைகளைக் கொட்ட ஏதுவாக இருக்கும் என்றும், குப்பை வண்டி தினமும் வந்தால் வீட்டில் சேரும் கழிவுகளை அகற்ற வசதியாக இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *