Tamilnadu
oi-Halley Karthik
திருவாரூர்: காவிரியில் கர்நாடகா அரசு போதுமான நீரை திறந்துவிடாததால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு 4.5 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு மற்றும் மற்றும் நீர் மேலாண்மை ஆணையம் இரண்டும் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் கூட கர்நாடக அரசு நீரை திறக்கவில்லை.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு போதுமான நீர் வரவில்லை. வழக்கமாக ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படும். கர்நாடகா அடம் பிடித்ததால், மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் என டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியிருக்கும் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
காவிரி நீரை நம்பி 3 லட்சம் ஏக்கர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு நீர் இல்லாததால் சாகுபடி நடக்கவில்லை. எனவே, டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை தேடி வேறு மாவட்டங்களுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தஞ்சைக்கு வேலைக்கு செல்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “காவிரி நீர் வந்தால், குறுவை சாகுபடி நடந்திருக்கும். வயலில் களை எடுப்பது, நாற்று நடுவது, மருந்து தெளித்தல் என வேலைகள் இருக்கும். ஒரு நாள் கூலி 250-300 தான் கிடைக்கும். இருந்தாலும் உள்ளூரில் வேலை என்பதால் ஓரளவுக்கு சமாளித்து வந்தோம். ரூ.250க்கு நாள் முழுக்க வேலை பார்க்க வேண்டும். இப்படி இருக்கும்போது இங்கும் வேலை இல்லாததால் நாங்கள் வெளியூருக்கு போக வேண்டி இருக்கிறது.
அதிகாலை 5 மணிக்கு கிளம்பி நாங்கள் மன்னார்குடி, ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூரை ஒட்டிய பகுதியில் வேலைக்கு போகிறோம். ஏற்கெனவே அங்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆழ்குழாய் நீரை நம்பிதான் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே குறைந்த இடங்களில்தான் வேளாண் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து வேலைக்கு செல்லும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. போகும் பாதி பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது.
அப்படியே வேலை கிடைத்தாலும் கூட அதே ரூ.250-300 தான் கிடைக்கிறது. இவ்வளவு குறைவான சம்பளத்திற்கு நாங்கள் 50-60 கி.மீ தள்ளி போக வேண்டி இருக்கிறது. அதுவும் உத்தரவாதம் இல்லாத வேலை. எனவே எங்களுக்கு காவிரி தண்ணீரை அரசு பெற்று தர வேண்டும். வேலை இல்லாத காலங்களில் வருமானத்திற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். எங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கின்றனர்.
திருவாரூர் முழுவதும் இதுவே நிலைமைதான். எனவே அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.