கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய புகார்.. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது எஃப்ஐஆர் பதிவு! – Kumudam

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவெகவுக்கு ஏற்கனவே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. என்றாலும், ஆளும் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யன், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாநிலத் தலைமைச் செயலர் எம். சாய்குமாருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் அளித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தப் புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தத் தகவல்கள் வைரலாகப் பரவிய நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின், இபிஎஸ், கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தவெக எம்எல்ஏவைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் தற்போது அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

அப்போது நீதிபதி வி. லட்சுமிநாராயணன் காவல்துறைக்குச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். கடந்த ஜூலை மாதமே கைது செய்திருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை எழுந்திருக்காது என்று நீதிபதி குறிப்பிட்டார். அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருக்க மாட்டார் என்றும் நீதிபதி கூறினார்.

மேலும், இது தொடர்பான விசாரணையை வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் அபினவ் கண்காணிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். விசாரணை அறிக்கையை டிசம்பர் 22-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பிய புகார் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர்கள் மாறுபட்ட தகவல்களையே தெரிவித்து வந்தனர்.

ஏற்கனவே வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியரிடம் புகார் எதுவும் வரவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதற்கு மாறான தகவலை காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருப்பம் அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *