India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மோதலுக்கு மத்தியில், நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அணி தனது வேட்பாளரை வாபஸ் பெற செய்துள்ளது. இதையடுத்து, அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் அவர் மம்தாவை வீழ்த்தியிருந்தார். அதேபோல அவர் நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார். தேர்தல் முடிந்து பாஜக ஆட்சியை கைப்பற்றி இருந்த நிலையில், நந்திகிராம் தொகுதியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

நந்திகிராம்
இதையடுத்து நந்திகிராம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் மம்தாவே இந்த தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு சஞ்சிதா பிரதான் டே என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் கடைசி நேரத்தில் மம்தா தரப்பு வேட்பு மனுவை வாபஸ் பெற்று அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மீண்டும் பெறுவதற்கான போராட்டத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மம்தா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ராகுல் காந்தி நேற்று என்னை அழைத்துப் பேசினார். நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். பாஜகவிடம் சரணடைய மாட்டோம்” என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது
நந்திகிராம் இடைத்தேர்தலுக்காக மம்தா பானர்ஜி தலைமையிலான அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் சஞ்சிதா பிரதான் டேவை வேட்பாளராக அறிவித்திருந்தது. ஆனால், வியாழக்கிழமை இரவு சஞ்சிதா பிரதான் டே, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், வெள்ளிக்கிழமை அவர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
நந்திகிராம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், மம்தா அணியால் தற்போது புதிய வேட்பாளரை களமிறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதாவது மம்தா கேட்டுக்கொண்டதால் அவரது வேட்பாளர் விலகவில்லை. மாறாக அவரது வேட்பாளர் விலகியதாலேயே மம்தா வேறு வழியின்றி காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மம்தா அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் டே, ஆசிரியராக பணியாற்றியவர். ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக 26,000 ஆசிரியர்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டபோது, அவரும் தனது வேலையை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்திகிராம்
நந்திகிராம் தொகுதி மேற்கு வங்க அரசியலில் முக்கியமானதாக இருக்கிறது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அப்போது அவருக்கு எதிராக முன்னாள் நெருங்கிய உதவியாளரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
அடி மேல் அடி
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்தது முதலே மம்தா வரிசையாக பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். முதலில் அவருக்கு எதிராக பல எம்பிக்கள் கலகம் செய்தனர். திரிணாமுல் காங்கிரஸில் இருந்தே விலகினர். தொடர்ந்து நேற்றைய தினம் தான் திரிணாமுல் காங்கிரஸின் பெயர் மற்றும் அவர்களின் இரட்டை மலர் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியது. இதனால் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணியும் திரிணாமுல் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

